கடிக்குளம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
பொடிகொள் மேனி வெண்ணூலினர், தோலினர் புலியுரி அதளாடை
கொடிகொள் ஏற்றினர், மணிகிணின் எனவரு குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்துறையும் கற்பகத்தைத் தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே
(2)
விண்களார் தொழும் விளக்கினைத், துளக்கிலா விகிர்தனை, விழவாரும்
மண்களார் துதித்தன்பராய் இன்புறும் வள்ளலை, மருவித் தம்
கண்கள்ஆர்தரக் கண்டு நம் கடிக்குளத்துறை தரு கற்பகத்தைப்
பண்கள்ஆர்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே
(3)
பொங்கு நற்கரி உரியது, போர்ப்பது புலியதள், அழல்நாகம்
தங்க, மங்கையைப் பாகமதுடையவர், தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர், கடிக்குளத்துறை தரு கற்பகத்தை
எங்கும் ஏத்திநின்றின்புறும் அடியரை இடும்பை வந்தடையாவே
(4)
நீர்கொள் நீள்சடை முடியனை, நித்திலத் தொத்தினை, நிகரில்லாப்
பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தைப், பசும்பொனை, விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்துறையும் கற்பகம் தன்னைச்
சீர்கொள் செல்வங்கள் ஏத்தவல்லார் வினை தேய்வது திணமாமே
(5)
சுரும்பு சேர்சடை முடியினன், மதியொடு துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந்தலர்ந்தன மலர்பல கொண்டு அடியவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையொடு உள மகிழ்ந்துரைப்பவர் விதியுடையவர் தாமே
(6)
மாதிலங்கிய பாகத்தன், மதியமொடு அலைபுனல் அழல்நாகம்
போதிலங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக்கழகாகக்
காதிலங்கிய குழையினன், கடிக்குளத்துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழுதேத்த வல்லார் வினை பற்றறக் கெடுமன்றே
(7)
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை
புலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசேரும் கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன், கடிக்குளத்துறையும் கற்பகத்தைச்சீர்
நிலவி நின்று நின்றேத்துவார் மேல்வினை நிற்ககில்லா தானே
(8)
மடுத்த வாளரக்கன்அவன் மலைதன்மேல் மதியிலாமையில் ஓடி
எடுத்தலும், முடிதோள் கர நெரிந்திற இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத்தலறிடக் கடிக்குளம் தனில்மேவிக்
கொடுத்த பேரருள்கூத்தனை ஏத்துவார் குணமுடையவர் தாமே
(9)
நீரினார் கடல்துயின்றவன் அயனொடு நிகழ்அடி முடிகாணார்
பாரினார் விசும்புறப் பரந்தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்
காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத்துறையும் கற்பகத்தின்தன்
சீரினார் கழலேத்த வல்லார்களைத் தீவினை அடையாவே
(10)
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளல்மின், விடமுண்ட
கண்டர், முண்ட நன்மேனியர், கடிக்குளத்துறை தரும் எம்ஈசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே
(11)
தனமலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நற்சம்பந்தன்
மனமலி புகழ் வண்தமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கடலோதம் வந்துலவிய கடிக்குளத்தமர்வானை
இனமலிந்திசை பாட வல்லார்கள் போய் இறைவனோடுறைவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page