திருஇரும்பைமாகாளம்:

<-- தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதிசூடி, மான்
கொண்ட கையால் புரமூன்றெரித்த குழகன் இடம்
எண்திசையும் புகழ்போய் விளங்கும் இரும்பை தனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே
(2)
வேத வித்தாய்; வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய்; நீறெழக் கொடிமா மதிலாயின
ஏத வித்தாயின தீர்க்கும்இடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே
(3)
வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தை பெம்மான்இடம், எழில்கொள் சோலை இரும்பை தனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண்டு உகள்கின்ற மாகாளமே
(4)
நஞ்சு கண்டத்தடக்கி, நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச வேழம்உரித்த பெருமான் அமரும்இடம்
எஞ்சல்இல்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந்த அழகாய மாகாளமே
(5)
பூசுமாசில் பொடியான்; விடையான்; பொருப்பான் மகள்
கூச ஆனையுரித்த பெருமான்; குறை வெண்மதி
ஈசன்; எங்கள் இறைவன் இடம் போல் இரும்பைதனுள்
மாசிலோர்கள் மலர் கொண்டணிகின்ற மாகாளமே
(6)
குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்; வினை
பறைவதாக்கும் பரமன்; பகவன்; பரந்தசடை
இறைவன்; எங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே
(7)
பொங்கு செங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம்
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்த அழகாய மாகாளமே
(8)
நட்டத்தோடு நரியாடு கானத்து எரியாடுவான்
அட்டமூர்த்தி அழல்போல் உருவன்; அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள்
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே
(9)
அட்டகாலன் தனை வவ்வினான்; அவ்வரக்கன்முடி
எட்டு மற்றும் இருபத்திரண்டும்இற ஊன்றினான்
இட்டமாக விருப்பானவன் போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்த எழிலாரும் மாகாளமே.
(10)
அரவமார்த்துஅன்று அனலம் கைஏந்தி, அடியும்முடி
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன்இடம்
குரவமாரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே
(11)
எந்தை எம்மான் இடம் எழில்கொள் சோலை இரும்பை தனுள்
மந்தமாய பொழில்சூழ்ந்த அழகாரும் மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடுவானை அணி !ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page