திருஎறும்பியூர் – அப்பர் தேவாரம் (2):

<– திருஎறும்பியூர்

(1)
பன்னிய செந்தமிழ் அறியேன், கவியேன் மாட்டேன்
   எண்ணோடு பண்ணிறைந்த கலைகளாய
தன்னை உந்தன் திறத்தறியாப் பொறியிலேனைத்
   தன்திறமும் அறிவித்து, நெறியும் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
   அடைந்தேனைத் தொடர்ந்தென்னை ஆளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(2)
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானைப்
   பசுபதியைப், பாசுபத வேடத்தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டினானை
   வேதியனை, விண்ணவனை, மேவி வையம்
அளந்தவனை, நான்முகனை, அல்லல் தீர்க்கும்
   அருமருந்தை, ஆமாறறிந்தென் உள்ளம்
தெளிந்து, எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(3)
கருவை, எந்தன் மனத்திருந்த கருத்தை, ஞானக்
   கடுஞ்சுடரைப், படிந்து கிடந்தமரர் ஏத்தும்
உருவை, அண்டத்தொரு முதலை, ஓத வேலி
   உலகின் நிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
   மயானத்து மாசிலாமணியை, வாசத்து
எருறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(4)
பகழிபொழிந்து அடலரக்கர் புரங்கள் மூன்றும்
   பாழ்படுத்த பரஞ்சுடரைப், பரிந்து தன்னைப்
புகழும் அன்பர்க்கின்பமரும் அமுதைத் தேனைப்
   புண்ணியனைப், புவனியது முழுதும் போத
உமிழும் அம்பொற்குன்றத்தை, முத்தின் தூணை
   உமையவள்தம் பெருமானை, இமையோர் ஏத்தும்
திகழ் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(5)
பாரிடங்களுடன் பாடப் பயின்று நட்டம்
   பயில்வானை, அயில்வாய சூலமேந்தி
நேரிடும் போர் மிகவல்ல நிமலன் தன்னை
   நின்மலனை, அம்மலர் கொண்டயனும் மாலும்
பார்இடந்தும் மேலுயர்ந்தும் காணா வண்ணம்
   பரந்தானை நிமிர்ந்து, முனிகணங்கள் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(6)
கார்முகிலாய்ப் பொழிவானைப், பொழிந்த முன்னீர்
   கரப்பானைக், கடியநடை விடையொன்றேறி
ஊர்பலவுந் திரிவானை, ஊரதாக
   ஒற்றியூர் உடையனாய், முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன்றுடையானைப், பிரமனோடு
   மாலவனும் இந்திரன் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(7)
நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
   நெறியிலங்கு மிகுகாலும் ஆகாசம்மும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
   மன்னுயிரும் என்னுயிரும் தானாய், செம்பொன்
ஆணியென்றும் மஞ்சனமா மலையே என்றும்
   அம்பவளத் திரளென்றும் அறிந்தோர் ஏத்தும்
சேண்எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(8)
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
   ஆரம்பக் குண்டரோடயர்த்து நாளும்
மறந்தும்அரன் திருவடிகள் நினைய மாட்டா
   மதியிலியேன், வாழ்வெலாம் வாளா மண்மேல்
பிறந்தநாள் நாளல்ல, வாளா ஈசன்
   பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்துளன்பு
செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(9)
அறிவிலங்கு மனத்தானை, அறிவார்க்கன்றி
   அறியாதார் தந்திறத்தொன்றறியாதானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
   புண்ணியனைப், பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை, மடல்தேன் கொன்றைச்
   சடையானை, மடைதோறுங் கமலமென்பூச்
செறிஎறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(10)
அருந்தவத்தின் பெருவலியால் அறிவதின்றி
   அடலரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்
முரிந்து நெரிந்தழிந்து பாதாளமுற்று
   முன்கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகும் ஆக்கினானை
   எம்மானைக் கைம்மாவின் உரிவை போர்த்த
திருந்துஎறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
   செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page