(1)
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம், மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய், நம் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே
(2)
ஆடரவத்தழகாமை அணிகேழல் கொம்பார்த்த
தோடரவத்தொரு காதன், துணைமலர் நற்சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே
(3)
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரம் கொண்டு
ஒன்றி வழிபாடு செயலுற்றவன் தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக்கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம்பெருமானே
(4)
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கண் பாலாட்டும்
சிந்தை செய்வோன் தன்கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும்அத்
தந்தை தனைச் சாடுதலுஞ் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலி எம்பெருமானே
(5)
வஞ்ச மனத்தஞ்சொடுக்கி வைகலும் நற்பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியெனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலி எம்பெருமானே
(6)
தாவியன் உடனிருந்தும் காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கணனென்றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோல் கோளிலி எம்பெருமானே
(7)
கல்நவிலும் மால்வரையான், கார்திகழும் மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான், தோத்திரஞ் செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான், வெண்பொடியான், அங்கையினில்
கொல்நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே
(8)
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாள் அவனுக்கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலி எம்பெருமானே
(9)
நாணமுடை வேதியனும், நாரணனும் நண்ணவொணாத்
தாணுஎனை ஆளுடையான் தன்னடியார்க்கன்புடைமை
பாணனிசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக் கோளிலி எம்பெருமானே
(10)
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண்வரு மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலி எம்பெருமானே
(11)
நம்பனை நல்லடியார்கள் நாமுடை மாடென்றிருக்கும்
கொம்பனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ் கொண்டு
இன்பமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
