திருநறையூர்ச் சித்தீச்சரம் – சுந்தரர் தேவாரம்:

 

திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவும் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச் சித்தீச்சரமே
(2)
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச்சரமே
(3)
இகழும் தகையோர் எயில் மூன்றெரித்த
பகழியொடு வில் உடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர்ச் சித்தீச்சரமே
(4)
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள்ளிஎழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச்சரமே
(5)
முழுநீறணி மேனியன், மொய் குழலார்
எழுநீர்மை கொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச்சரமே
(6)
ஊனாருடை வெண்தலைஉண் பலிகொண்டு
ஆனார் அடலேறமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச்சரமே
(7)
காரூர் கடலில் விடம் உண்டருள் செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச்சரமே
(8)
கரியின் உரியும் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச்சரமே
(9)
பேணா முனிவான் பெருவேள்வியெலாம்
மாணாமை செய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவில்
சேணார் நறையூர்ச் சித்தீச்சரமே
(10)
குறியில் வழுவாக் கொடுங்கூற்றுதைத்த
எறியும் மழுவாள் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச்சரமே
(11)
போரார் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச்சரத்தை
ஆரூரன்சொல் இவை வல்லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய்துவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page