(1)
ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலும் காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(2)
படையானைப் பாசுபத வேடத்தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப், பாவமெல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள்
அருமருந்தை, ஆவா என்றருள் செய்வானைச்
சடையானைச், சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளையேற்றின்
நடையானை, நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(3)
படஅரவம் ஒன்று கொண்டரையில் ஆர்த்த
பராபரனைப், பைஞ்ஞீலி மேவினானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
அமுதாக உண்டானை, ஆதியானை
மடலரவம் மன்னுபூங் கொன்றையானை
மாமணியை, மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவம் செய்தானை, நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(4)
கட்டங்கம் ஒமொன்று தம் கையிலேந்திக்
கங்கணமும் காதில்விடு தோடுமிட்டுச்
சுட்டங்கம் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலம் கையேந்தினானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(5)
உலந்தார்தம் அங்கம் கொண்டு உலகமெல்லாம்
ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வம்
சிலந்தி தனக்கருள் செய்த தேவதேவைத்
திருச்சிராப்பள்ளியெம் சிவலோகனைக்
கலந்தார்தம் மனத்தென்றும் காதலானைக்
கச்சி ஏகம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(6)
குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை இடப்பாலானை
மலம்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப், பிறைதவழ் செஞ்சடையினானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க்கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(7)
பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையினானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னினானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வியெல்லாம்
சிதைத்தானை, உதைத்துஅவன்தன் சிரம்கொண்டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(8)
சொல்லானைச், சுடர்ப்பவளச் சோதியானைத்
தொல்அவுணர் புரமூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேலானானை
மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறம் கண்டானைக்
காளத்தியானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(9)
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வாய் ஓட்டி அடர்வித்தானைச்
சென்றாது வேண்டிற்றொன்று ஈவான் தன்னைச்
சிவனேஎம் பெருமான் என்றிருப்பார்க்கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
(10)
இறவாமே வரம்பெற்றேன் என்று மிக்க
இராவணனை இருபதுதோள் நெரிய ஊன்றி
உறவாகி இன்னிசை கேட்டிரங்கி மீண்டே
உற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னினானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை, நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...