(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
பைம்மா நாகம், பன்மலர் கொன்றை, பன்றி வெண்கொம்பொன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர்
அம் மானோக்கிய வந்தளிர் மேனி அரிவையோர் பாகம் அமர்ந்த
பெம்மான், நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே
(2)
மூவருமாகி இருவருமாகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச்
சாவமதாகிய மால்வரை கொண்டு தண்மதில் மூன்றும்எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே
(3)
செய் பூங்கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர்புனல் சேர்த்திக்
கொய் பூங்கோதை மாதுமை பாகம் கூடியோர் பீடுடை வேடர்
கைபோல் நான்ற கனிகுலை வாழை காய் குலையில் கமுகீனப்
பெய் பூம்பாளை பாய்ந்திழி தேறல் பில்கு பெருந்துறையாரே
(4)
நிலனொடு வானும், நீரொடு தீயும் வாயுவும் ஆகியோர் ஐந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர், வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்கும் தானலதின்றி நன்கெழு சிந்தையராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே
(5)
பணிவாய் உள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ளமிலாத சுமடர்கள் சோதிப்பரியார்
அணியார் நீலமாகிய கண்டர், அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்மல்கு பெருந்துறையாரே
(6)
எண்ணார் தங்கள் மும்மதிள் வேவ, ஏவலம் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த வித்தகர், வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடலறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்
பெண்ஆணாய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே
(7)
விழையார் உள்ள நன்கெழு நாவில் வினைகெட வேதம்ஆறங்கம்
பிழையா வண்ணம் பண்ணியவாற்றால் பெரியோர் ஏத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி உந்தித் தண்ணரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை அன்னம் கூடு பெருந்துறையாரே
(8)
பொன்னங்கானல் வெண்திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மாமுண் ஆகமும் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னம் கன்னிப் பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே
(9)
புள்வாய் போழ்ந்து மாநிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின்
உள்வாய் அல்லி மேலுறைவானும் உணர்வரியான், உமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின் முகமலரக் கயல் பாயக்
கள்வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே
(10)
குண்டும் தேரும் கூறைகள் ஐந்தும் கூப்பிலர் செப்பிலராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ்பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே
(11)
கடையார் மாட நன்கெழு வீதிக் கழுமலவூரன் கலந்து
நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் நல்லபெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவை வல்லார்
உடையாராகி உள்ளமும்ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...