சீகாழி – சம்பந்தர் தேவாரம் (13):

(1)
பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடையவன்இறை
இறையணி வளையிணை முலையவள் இணைவனதெழிலுடை இடவகை
கறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழல் மருவுமே
(2)
பிணிபடுகடல் பிறவிகள்அறல் எளிதுளதது பெருகியதிரை
அணிபடு கழுமலம் இனிதமர் அனலுருவினன், அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வளர் இளமதி புனைவனை, உமை தலைவனை, நிற
மணிபடு கறைமிடறனை, நலம்மலி கழலிணை தொழல் மருவுமே
(3)
வரியுறு புலியதள் உடையினன், வளர்பிறை ஒளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடை, விரைபுரை பொழில் விழவொலிமலி கழுமலம்அமர்
எரியுறுநிற இறைவனதடி இரவொடு பகல் பரவுவர் தமது
தெரியுறு வினைசெறி கதிர்முனை இருள்கெட நனி நினைவெய்தும்அதே
(4)
வினைகெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு, குலமதி
புனைகொடி இடைபொருள் தருபடு களிறினது உரிபுதை உடலினன்
மனைகுட வயிறுடையன சில வருகுறள் படைஉடையவன், மலி
கனைகடலடை கழுமலம்அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே
(5)
தலைமதி புனல்விட அரவிவை தலைமையதொரு சடை இடையுடன்
நிலைமருவ ஓரிடம் அருளினன், நிழல் மழுவினொடழல் கணையினன்
மலைமருவிய சிலைதனில் மதில் எரியுண மன மருவினன், நல
கலை மருவிய புறவணிதரு கழுமலம் இனிதமர் தலைவனே
(6)
வரைபொருதிழி அருவிகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் அமர்கனல் உருவினன்
அரைபொரு புலியதள் உடையினன் அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படஉறு துயர்கெட உயருலகெய்தல் ஒரு தலைமையே
(7)
முதிருறி கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை உடைபுலி அதள்இடை இருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழல் அடிகளதடி தொழும் அறிவலதறி அறியமே
(8)
கடலென நிறநெடு முடியவன் அடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படை அருளியபுகழ் அரவரையினன், அணிகிளர் பிறை
விடநிறை மிடறுடையவன், விரி சடையவன், விடையுடையவன், உமை
உடனுறை பதிகடல் மறுகுடை உயர்கழுமல வியன்நகரதே
(9)
கொழுமலர் உறைபதி உடையவன், நெடியவன்என இவர்களும்அவன்
விழுமையை அளவறிகிலர். இறை விரைபுணர் பொழிலணி விழஅமர்
கழுமலம் அமர்கனல் உருவினன், அடியிணை தொழுமவர் அருவினை
எழுமையும் இலநில வகைதனில், எளிதிமையவர் வியன்உலகமே
(10)
அமைவன துவர்இழுகிய துகில்அணியுடையினர், அமண்உருவர்கள்
சமையமும் ஒருபொருள் எனும்அவை சலநெறியன அறவுரைகளும்
இமையவர் தொழு கழுமலம்அமர் இறைவனதடி பரவுவர்தமை
நமையல வினைநலன் அடைதலில் உயர்நெறிநனி நணுகுவர்களே
(11)
பெருகிய தமிழ்விரகினன் மலி பெயரவன் உறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமலம் உறைவிடம் எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழியன ஒருபதுமுடன்
மருவிய மனமுடையவர் மதி உடையவர் விதியுடையவர்களே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (15):

<– சீகாழி

(1)
எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதி செய்ய, வளர் தூபமொடு தீபமலி வாய்மை அதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பை நகரே
(2)
அங்கம்விரி துத்திஅரவாமை விரவாரம்அமர் மார்பிலழகன்
பங்கய முகத்திரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான்
பொங்கு பரவைத் திரைகொணர்ந்து பவளத்திரள் பொலிந்த வயலே
சங்குபுரி இப்பி தரளத்திரள் பிறங்கொளி கொள் சண்பைநகரே
(3)
போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி ஏழையிள மாதினொடு இருந்த பதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பை நகரே
(4)
கொட்டமுழ இட்டஅடி வட்டணைகள் கட்டநடமாடி குலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவு பதிதான்
வட்டமதி தட்டுபொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்டகலை எட்டு மருவெட்டும் வளர் தத்தைபயில் சண்பை நகரே
(5)
பணங்கெழுவு பாடலினொடு ஆடல்பிரியாத பரமேட்டி, பகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை அன்பர் பெருமானதிடமாம்
இணங்கெழுவி ஆடுகொடி மாடமதில் நீடுவிரையார் புறவெலாம்
தணங்கெழுவி ஏடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே
(6)
பாலனுயிர் மேலணவு காலன்உயிர் பாறஉதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழை தனோடும் அமர்வெய்தும் இடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டி நறவுண்டு இசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பை நகரே
(7)
விண்பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவு தான் மிகவுடை
மண்பொய் அதனால் வளமிலாதொழியினும் தமது வண்மை வழுவார்
உண்பகர வாருலகில் ஊழிபல தோறு நிலையான பதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழும்அடியார் தமது தன்மைஅதுவே
(8)
வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த, மதியில் வலியுடை
அரக்கனதுரக்கர சிரத்துற அடர்த்தருள் புரிந்த அழகன்
இருக்கைய தருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே
(9)
நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேர்உருவமாம்
மாலு மலரானும் அறியாமைவளர் தீயுருவமான வரதன்
சேலுமின வேலுமன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாம்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே
(10)
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாதவகை உண்டுபலபொய்
ஓதியவர் கொண்டு செய்வதொன்றுமிலை, நன்றதுணர்வீர் உரைமினோ
ஆதிஎமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான்
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல்புக எறிகொள் சண்பைநகரே
(11)
வாரின்மலி கொங்கைஉமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமரும் ஊர்
சாரின்முரல் தென்கடல் விசும்புற முழங்கொலி கொள் சண்பைநகர்மேல்
பாரின் மலிகின்றபுகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (16):

(1)
சங்கமரு முன்கை மடமாதை ஒருபாலுடன் விரும்பி
அங்கமுடன் மேலுற அணிந்து பிணிதீர அருள்செய்யும்
எங்கள்பெருமான் இடம் எனத்தகு, முனைக்கடலின் முத்தம்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுரமாமே
(2)
சல்லரி யாழ்முழவ மொந்தைகுழல் தாளமதியம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரி கையேந்தி நடமாடு சடைஅண்ணல் இடமென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுரமாமே
(3)
வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்அரையில் ஆர்த்த பரமேட்டி, பழி தீரக்
கண்டரவ ஒண்கடலின் நஞ்சம்அமுதுண்ட கடவுள் ஊர்
தொண்டர்அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரமாமே
(4)
கொல்லைவிடை ஏறுடைய கோவணன், நாஅணவு மாலை
ஒல்லையுடையான், அடையலார் அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லை உடையான் மிகவிரும்பு பதி, மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவாக இடர் தீர்த்தருள்செய் தோணிபுரமாமே
(5)
தேயுமதியம் சடைஇலங்கிட, விலங்கல் மலிகானில்
காயும்அடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன், நினைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறையோதி நிறை தோணிபுரமாமே
(6)
பற்றலர்தம் முப்புரமெரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் ஒழித்தருளும் கொள்கையினன், வெள்ளின் முதுகானில்
பற்றவன், இசைக்கிளவி பாரிடமதேத்த நடமாடும்
துற்ற சடைஅத்தன் உறைகின்ற பதி தோணிபுரமாமே
(7)
பண்ணமரு நான்மறையர், நூல்முறை பயின்ற திருமார்பில்
பெண்ணமரு மேனியினர், தம்பெருமை பேசும்அடியார் மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தல் உடையான்ஊர்
துண்ணென விரும்பு சரியைத் தொழிலர் தோணிபுரமாமே
(8)
தென்திசை இலங்கைஅரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றிசை புயங்களை அடர்த்தருளும் வித்தகன் இடம், சீர்
ஒன்றிசை இயற்கிளவி பாட, மயிலாட, வளர்சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுரமாமே
(9)
நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலதனால் மிக அளப்பரிய வண்ணம் எரியாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளும் அரியான், உறைவு தோணிபுரமாமே
(10)
மூடு துவர்ஆடையினர், வேடநிலை காட்டும் அமணாதர்
கேடுபல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்தடைவினான், அக்
காடு பதியாக நடமாடி, மட மாதொடு இருகாதில்
தோடுகுழை பெய்தவர் தமக்கு, உறைவு தோணிபுரமாமே
(11)
துஞ்சிருளில் நின்று நடமாடி மிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்கு திருஞானசம்பந்தன் சொல்மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம்
வஞ்சமிலர், நெஞ்சிருளும் நீங்கி அருள்பெற்று வளர்வாரே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (17):

(1)
பெண்ணியல் உருவினர், பெருகிய புனல்விரவிய பிறைக்
கண்ணியர், கடுநடை விடையினர், கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள் புரிபவர் நணுகுயர் பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே
(2)
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமொர் அரவமும் மலர்அரை மிசையினில்
திக்குடை மருவிய உருவினர், திகழ்மலை மகளொடும்
புக்குடன் உறைவது புதுமலர் விரைகமழ் புறவமே
(3)
கொங்கியல் சுரிகுழல் வரிவளை இளமுலை உமையொரு
பங்கிய திருவுரு உடையவர், பரசுவொடிரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர், விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளஅதன் மிசைஉயர் புறவமே
(4)
மாதவம்உடை மறையவன் உயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி இறையுற உயிரது விலகினார்
சாதக உருஇயல் கானிடை உமை வெருவுற வரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே
(5)
காமனை அழல்கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமமதுற விறல் சுடர் கொளுவிய இறை தொகுபதி
ஓமமொடுயர் மறை பிறவிய வகை தனொடு ஒளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே
(6)
சொல் நயமுடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர், திருவடி பேணிட
முன்னைய முதல்வினை அறஅருளினர், உறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே
(7)
வரிதரு புலியதள் உடையினர், மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவதொர் இயல்பினர்
புரிதரு குழல்உமையொடும் இனிதுறை பதி புறவமே
(8)
வசிதரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிவுற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு உடையவர் உறைபதி புறவமே
(9)
தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் உணர்வுடை ஒருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனும் எழுவகைப்
போனக மருவினன் அறிவரியவர் பதி புறவமே
(10)
கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்தம் உறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுகழ் ஒலிமலி புறவமே
(11)
போதியல் பொழிலணி புறவநன் நகருறை புனிதனை
வேதியர் அதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய ஒருபதும் உரியதொர் இசைகொள உரைசெயும்
நீதியர் அவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (18):

(1)
விளங்கியசீர்ப் பிரமனூர், வேணுபுரம், புகலி, வெங்குரு, மேற்சோலை
வளங்கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண் புறவம், மண்மேல்
களங்கமில்ஊர் சண்பை, கமழ் காழி, வயங்கொச்சை, கழுமலம் என்றின்ன
இளங்குமரன் தன்னைப் பெற்றிமையவர் தம் பகைஎரிவித்த இறைவன்ஊரே
(2)
திருவளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரனூர், அயனூர், தெய்வத்
தருவளரும் பொழில் புறவம், சிலம்பனூர், காழி, தகு சண்பை, ஒண்பா
உருவளர் வெங்குருப் புகலி, ஓங்கு தராய், தோணிபுரம், உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல் விடமதுண்டு அணிகொள் கண்டத்தோன் விரும்பும்ஊரே
(3)
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் வாழூர்
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி, இறை கொச்சையம், பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய மிக்க அயனூர், அமரர் கோனூர்
ஆய்ந்த கலையார் புகலி, வெங்குருஅது அரன்நாளும் அமரும்ஊரே
(4)
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப்புகலி, தராய், தோணிபுரம்,வான்
சேமமதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரனூர், சீர்ப்
பூமகனூர், பொலிவுடைய புறவம், விறல் சிலம்பனூர், காழி, சண்பை
பாமருவு கலையெட்டெட்டு உணர்ந்தவற்றின் பயன் நுகர்வோர் பரவும் ஊரே
(5)
தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க்காழி, வயங்கொச்சை, தயங்கு பூமேல்
விரைச்சேரும் கழுமலம், மெய்யுணர்ந்தயனூர், விண்ணவர் தம் கோனூர், வென்றித்
திரைச்சேரும் புனல்புகலி, வெங்குருச் செல்வம் பெருகு தோணிபுரம்; சீர்
உரைச்சேர் பூந்தராய், சிலம்பனூர், புறவம், உலகத்தில் உயர்ந்த ஊரே
(6)
புண்டரிகத்தார் வயல்சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங்காழி, சண்பை
எண்திசையோர் இறைஞ்சிய வெங்குருப் புகலி, பூந்தராய், தோணிபுரம்;சீர்
வண்டமரும் பொழில் மல்கு கழுமலம், நற்கொச்சை, வானவர் தங்கோனூர்
அண்டயனூர் இவையென்பர் அருங்கூற்றை உதைத்துகந்த அப்பன்ஊரே
(7)
வண்மை வளர் வரத்தயனூர், வானவர்தம் கோனூர், வண்புகலி, இஞ்சி
வெண்மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை, வியன் காழி, கொச்சை
கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம், பூந்தராய், சீர்ப்
பண் மலியும் சிரபுரம், பார்புகழ் புறவம், பால் வண்ணன் பயிலும் ஊரே
(8)
மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பனூர், காழி மூதூர்
நீடியலும் சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம், கமலநீடு
கூடியவன் ஊர், வளர் வெங்குருப் புகலி, தராய், தோணிபுரம், கூடப் போர்
தேடிஉழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச் சிலையன் ஊரே
(9)
இரக்கமுடை இறையவன் ஊர், தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனல் புறவம், நின்ற தவத்தயனூர், சீர்த்தேவர் கோனூர்
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசிலாச் சண்பை, காழி, கொச்சை
அரக்கன் விறல்அழித்தருளி கழுமலம், அந்தணர் வேதம்அறாத ஊரே
(10)
மேலோதும் கழுமலம், மெய்த் தவம் வளரும் கொச்சை, இந்திரனூர், மெய்மை
நூலோதும் அயன் தனூர், நுண்ணறிவார் குருப்புகலி, தராய், தூநீர்மேல்
சேலோடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பனூர், செருச் செய்தன்று
மாலோடும் அயன்அறியான் வண்காழி, சண்பை, மண்ணோர் வாழ்த்தும் ஊரே
(11)
ஆக்கமர் சீரூர் சண்பை, காழி, அமர் கொச்சை, கழுமலம், அன்பான்ஊர்
ஒக்கமுடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண் புறவம், நண்பார்
பூக்கமலத்தோன் மகிழ்ஊர், புரந்தரனூர், புகலி, வெங்குருவும் என்பர்
சாக்கியரோடமண் கையர் தாமறியா வகை நின்றான் தங்கும்ஊரே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (19):

<– சீகாழி

(1)
பூமகனூர், புத்தேளுக்கிறைவனூர், குறைவிலாப் புகலி, பூமேல்
மாமகளூர் வெங்குரு, நற்தோணிபுரம், பூந்தராய், வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரம், சீர்ப்புறவம், நிறைபுகழ்ச் சண்பை, காழி, கொச்சை
காமனைமுன் காய்ந்த நுதல்கண்ணவன் ஊர், கழுமலம் நாம் கருதும் ஊரே
(2)
கருத்துடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த் தோணிபுரம், கனகமாட
உருத்திகழ் வெங்குருப் புகலி, ஓங்கு தராய், உலகாரும் கொச்சை, காழி
திருத்திகழும் சிரபுரம், தேவேந்திரனூர், செங்கமலத்தயனூர், தெய்வத்
தருத்திகழும் பொழில் புறவம், சண்பை, சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே
(3)
ஊர் மதியைக் கதுவ உயர்மதில் சண்பை, ஒளிமருவு காழி, கொச்சை
கார்மலியும் பொழில் புடைசூழ் கழுமலம், மெய்த் தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர்மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயனூர், பூங்கற்பத்
தார் மருவும் இந்திரனூர், புகலி, வெங்குருக் கங்கை தரித்தோன் ஊரே
(4)
தரித்த மறையாளர்மிகு வெங்குருச், சீர்த் தோணிபுரம், தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி, இமையோர் கோனூர்
தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர்திகழ் காழி, சண்பை, செழு மறைகளெல்லாம்
விரித்த புகழ்ப் புறவம், விரைக் கமலத்தோன் ஊர், உலகில் விளங்குமூரே
(5)
விளங்கயனூர், பூந்தராய், மிகுசண்பை, வேணுபுரம், மேகம் ஏய்க்கும்
இளங்கமுகம் பொழில் தோணிபுரம், காழி, எழில் புகலி, புறவம், ஏரார்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச்சிரபுரம், வன்னஞ்சம் உண்டு
களங்கமலி களத்தவன் சீர்க் கழுமலம், காமன் உடலம் காய்ந்தோன் ஊரே
(6)
காய்ந்து வரு காலனை அன்றுதைத்தவன் ஊர் கழுமலம், மாத்தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குருப் புகலி, இந்திரனூர், இருங்கமலத்தயனூர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சை, காழி, சண்பை
சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள்தம் பகை கெடுத்தோன் திகழுமூரே
(7)
திகழ் மாடமலி சண்பை, பூந்தராய், பிரமனூர், காழி, தேசார்
மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம் கொச்சை, புறவம், விண்ணோர்
புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு, வெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்தன் அடிஇணைகள் பணிந்துலகில் நின்றவூரே
(8)
நின்றமதில் சூழ்தரு வெங்குருத் தோணிபுரம், நிகழும் வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர் புறவம், மோடி
சென்று புறம் காக்கும்ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி, தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம், பூதங்கள் தாம் காக்க மிக்கவூரே
(9)
மிக்க கமலத்தயனூர், விளங்கு புறவம், சண்பை, காழி, கொச்சை
தொக்க பொழில் கழுமலம், தூத்தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் சேரூர்
மைக்கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு, வல்லரக்கன் திண்தோள்
ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடழித்துகந்த எம்மான் ஊரே
(10)
எம்மான் சேர் வெங்குருச் சீர்ச் சிலம்பனூர், கழுமலம், நற்புகலி, என்றும்
பொய் மாண்பில்ஓர் புறவம், கொச்சை, புரந்தரனூர், நற்தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயனூர், தராய், சண்பை, காரின்
மெய்ம்மால் பூமகன் உணராவகை தழலாய் விளங்கிய எம் இறைவனூரே
(11)
இறைவன்அமர் சண்பை, எழில் புறவம், அயனூர், இமையோர்க்கதிபன் சேரூர்
குறைவில் புகழ்ப் புகலி, வெங்குருத் தோணிபுரம், குணமார் பூந்தராய், நீர்ச்
சிறைமலி நற்சிரபுரம், சீர்க்காழி, வளர் கொச்சை, கழுமலம், தேசின்றிப்
பறி தலையோடமண் கையர் சாக்கியர்கள் பரிசறியா அம்மான் ஊரே

திருக்கடம்பூர் (மேலக் கடம்பூர்) – அப்பர் தேவாரம் (1)

(1)
தளரும் கோளரவத்தொடு தண்மதி
வளரும் கோலவளர் சடையார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே
(2)
வெலவலான் புலன்ஐந்தொடு, வேதமும்
சொலவலான், சுழலும் தடுமாற்றமும்
அலவலான், மனையார்ந்த மென்தோளியைக்
கலவலான் கடம்பூர்க் கரக்கோயிலே
(3)
பொய் தொழாது புலியுரியோன் பணி
செய்தெழா, எழுவார் பணி செய்தெழா
வைதெழாதெழுவார் அவர் எள்கநீர்
கைதொழா எழுமின் கரக்கோயிலே
(4)
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடலது செய்தே
எண்ணிலார் எயில் மூன்றும் எரித்த!முக்
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே
(5)
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
(6)
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடையாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும்
கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலே
(7)
பண்ணினார் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வதன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுவன
கண்ணினார் கடம்பூர்க் கரக்கோயிலே
(8)
அங்கை ஆரழலேந்தி நின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கையான் உறையும் கரக்கோயிலைத்
தங்கையால் தொழுவார் வினை சாயுமே
(9)
நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே
(10)
பணங்கொள் பாற்கடல் பாம்பணையானொடும்
மணங்கமழ் மலர்த் தாமரையானவன்
பிணங்கும் பேரழல் எம்பெருமாற்கிடம்
கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலே
(11)
வரைக்கண் நாலஞ்சு தோளுடையான் தலை
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கும் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page