திருக்கடம்பூர் (மேலக் கடம்பூர்) – அப்பர் தேவாரம் (2)

(1)
ஒருவராய் இரு மூவருமாயவன்
குருவதாய குழகன் உறைவிடம்
பருவரால் குதிகொள்ளும் பழனம்சூழ்
கருவதாம் கடம்பூர்க் கரக்கோயிலே
(2)
வன்னி மத்தம் வளரிளம் திங்களோர்
கன்னியாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும்
மன்னினான் கடம்பூர்க் கரக்கோயிலே
(3)
இல்லக் கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடையும் கடம்பூர் நகர்ச்
செல்வக்கோயில் திருக்கரக் கோயிலே
(4)
வேறு சிந்தையிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்திமையவர் தாம்தொழும்
ஆறுசேர் கடம்பூர்க் கரக்கோயிலே
(5)
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணல் புன்னையும் ஞாழலும்
தெங்குசேர் கடம்பூர்க் கரக்கோயிலே
(6)
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லையான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்லசேர் கடம்பூர்க் கரக்கோயிலே
(7)
தளரும் வாளரவத்தொடு தண்மதி
வளரும் பொற்சடையாற்கு இடமாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரியார் கடம்பூர்க் கரக்கோயிலே
(8)
உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம்
பெற்றாராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதிலெய்த முதல்வனார்
கற்றார் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
(9)
வெள்ளை நீறணி மேனியவர்க்கெலாம்
உள்ளமாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன்சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
(10)
பரப்பு நீர் இலங்கைக்கிறைவன் அவன்
உரத்தினால் அடுக்கல் எடுக்கல்லுற
இரக்கமின்றி இறைவிரலால் தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே

 

திருக்கடம்பூர் (மேலக் கடம்பூர்) – சம்பந்தர் தேவாரம்:

(1)
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடையானைத்
தேனமர் கொன்றையினானைத், தேவர் தொழப்படுவானைக்
கானமரும் பிணை புல்கிக் கலைபயிலும் கடம்பூரில்
தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே
(2)
அரவினொடாமையும் பூண்டு, அந்துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி, விரும்பிப்
பரவும் தனிக்கடம்பூரில் பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கதுவாமே
(3)
இளிபடும் இன்சொலினார்கள் இருங்குழல் மேலிசைந்தேறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறைசூடி ஒண்ணுதலோடுடனாகிப்
புலியதளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுது நாமே
(4)
பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர் நெடுமாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவி நின்றாடல் மகிழும்
பிறையுடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியோரே
(5)
தீவிரியக் கழலார்ப்பச் சேயெரி கொண்டு இடுகாட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுதலான் கடம்பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவமிலாரே
(6)
தண்புனல் நீள்வயல் தோறும் தாமரை மேல்அனம் வைகக்
கண்புணர் காவில் வண்டேறக் கள்ளவிழும் கடம்பூரில்
பெண்புனை கூறுடையானைப், பின்னு சடைப் பெருமானைப்
பண்புனை பாடல் பயில்வார் பாவமிலாதவர் தாமே
(7)
பலிகெழு செம்மலர் சாரப் பாடலொடு ஆடலறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ் கடம்பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான், ஒண்ணுதலாள் உமை கேள்வன்
புலியதள் ஆடையினான்தன் புனைகழல் போற்றல் பொருளே
(8)
பூம்படுகில் கயல் பாயப் புள்ளிரியப் புறங்காட்டில்
காம்படு தோளியர் நாளும் கண்கவரும் கடம்பூரில்
மேம்படு தேவியொர் பாகமேவி எம்மான் என வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே
(9)
திருமரு மார்பிலவனும், திகழ்தரு மாமலரோனும்
இருவருமாய் அறிவொண்ணா எரிஉருவாகிய ஈசன்
கருவரை காலில்அடர்த்த கண்ணுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுலகம் பெறுவாரே
(10)
ஆடை தவிர்த்து அறம் காட்டும் அவர்களும், அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார், சொல்லினும் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன்எம் வேத முதல்வன்
காடதனில் நடமாடும் கண்ணுதலான் கடம்பூரே
(11)
விடைநவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடுமாடம்
கடைநவிலும் கடம்பூரில் காதலனைக் கடற்காழி
நடைநவில் ஞானசம்பந்தன் நன்மையால்ஏத்திய பத்தும்
படைநவில் பாடல் பயில்வார் பழியொடு பாவமிலாரே

 

திருவேட்களம் – சம்பந்தர் தேவாரம் (1):

(1)
அந்தமும் ஆதியுமாகி அண்ணல் ஆரழல்அங்கை அமர்ந்திலங்க
மந்தமுழவம் இயம்ப, மலைமகள் காண நின்றாடிச்
சந்தமிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப
வெந்த வெண்ணீறு மெய்பூசும் வேட்கள நன்னகராரே
(2)
சடைதனைத் தாழ்தலும் ஏறமுடித்துச், சங்கவெண்தோடு சரிந்திலங்கப்
புடைதனில் பாரிடம்சூழப் போதருமாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவணஆடை, உண்பதும் ஊரிடு பிச்சை, வெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே
(3)
பூதமும் பல்கணமும் புடைசூழப், பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்
சீதமும் வெம்மையுமாகிச் சீரொடு நின்ற எம்செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தருவேலை, உள்ளம் கலந்து இசையாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே
(4)
அரை புல்கும் ஐந்தலை ஆடலரவம் அமைய வெண்கோவணத்தோடசைத்து
வரை புல்கு மார்பிலொர்ஆமை வாங்கிஅணிந்தவர் தாம்
திரை புல்கு தெண்கடல் தண்கழியோதம் தேனலங்கானலில் வண்டு பண்செய்ய
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே
(5)
பண்ணுறு வண்டறை கொன்றைஅலங்கல், பால்புரை நீறு, வெண்ணூல் கிடந்த
பெண்ணுறு மார்பினர், பேணார் மும்மதில்எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கள் கண்ணியர், விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன்னகராரே
(6)
கறிவளர் குன்றமெடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆரழல்உண்ணப் பொங்கிய பூதபுராணர்
மறிவளர் அங்கையர், மங்கையொர் பங்கர், மைஞ்ஞிற மானுரி தோலுடைஆடை
வெறிவளர் கொன்றையந்தாரார் வேட்கள நன்னகராரே
(7)
மண்பொடிக் கொண்டெரித்தோர் சுடலை, மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி, நொய்யன செய்யல்உகந்தார்
கண்பொடி வெண்தலைஓடு கையேந்திக், காலனைக் காலால் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்னகராரே
(8)
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார் அமுதம் அமரர்க்கருளிச்
சூழ்தரு பாம்பரை ஆர்த்துச், சூலமோடு ஒண் மழுவேந்தித்
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித், தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே
(9)
திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசைமேல்அளந்த
கருவரையேந்திய மாலும் கைதொழ நின்றதும்அல்லால்
அருவரைஒல்க எடுத்த அரக்கன் நாடெழில் தோள்கள் ஆழத்தழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே
(10)
அத்தமண் தோய் துவரார், அமண்குண்டர், யாதுமல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்
முத்தன வெண்முறுவல் உமைஅஞ்ச, மூரிவல் ஆனையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேதமுதல்வர் வேட்கள நன்னகராரே
(11)
விண்ணியல் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடியெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள்ஒரு பாகம்அமர்ந்து பேணிய வேட்களமேல் மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே

 

திருவேட்களம் – அப்பர் தேவாரம் (1):

(1)
நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத்துள்உறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே
(2)
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பனாகில் எனக்கிடர் இல்லையே
(3)
வேட்களத்துறை வேதியன் எம்இறை
ஆக்கள்ஏறுவர் ஆனைஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற்றண்ணலே
(4)
அல்லல் இல்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திருவேட்களம் கைதொழ
வல்லராகில் வழியது காண்மினே
(5)
துன்பமில்லை துயரில்லை யாம்இனி
நம்பனாகிய நன்மணி கண்டனார்
என்பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே
(6)
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்டனார்திரு வேட்களம் கைதொழப்
பட்ட வல்வினையாயின பாறுமே
(7)
வட்ட மென்முலையாள் உமை பங்கனார்
எட்டும்ஒன்றும் இரண்டு மூன்றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களம் கைதொழு
திட்டமாகி இரு மடநெஞ்சமே
(8)
நட்டமாடிய நம்பனை நாள்தொறும்
இட்டத்தால் இனிதாக நினைமினோ
வட்ட வார்முலையாள் உமை பங்கனார்
சிட்டனார்திரு வேட்களம் தன்னையே
(9)
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்திரு வேட்களச் செல்வரே
(10)
சேடனார் உறையும் செழுமாமலை
ஓடி ஆங்கெடுத்தான் முடிபத்திற
வாடவூன்றி மலரடி வாங்கிய
வேடனார்உறை வேட்களம் சேர்மினே

 

கஞ்சனூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை
    மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை
நாவலனை, நரை விடையொன்றேறுவானை
    நால்வேதம் ஆறங்கம் ஆயினானை
ஆவினில் ஐந்துகந்தானை, அமரர் கோவை
    அயன்திருமால் ஆனானை, அனலோன் போற்றும்
காவலனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(2)
தலையேந்து கையானை, என்பு ஆர்த்தானைச்
    சவந்தாங்கு தோளானைச், சாம்பலானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
    கோணாகம் அசைத்தானைக், குலமாம் கைலை
மலையானை, மற்றொப்பார் இல்லாதானை
    மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும்
கலையானைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(3)
தொண்டர்குழாம் தொழுதேத்த அருள் செய்வானைச்
    சுடர்மழுவாள் படையானைச், சுழிவான் கங்கைத்
தெண்திரைகள் பொருதிழி செஞ்சடையினானைச்
    செக்கர்வான் ஒளியானைச், சேராது எண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வியெல்லாம்
    பாழ்படுத்துத் தலையறுத்துப் பல்கண் கொண்ட
கண்டகனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(4)
விண்ணவனை, மேருவில்லா உடையான் தன்னை
    மெய்யாகிப் பொய்யாகி விதியானானைப்
பெண்ணவனை, ஆணவனைப், பித்தன் தன்னைப்
    பிணமிடு காடுடையானைப், பெருந் தக்கோனை
எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும்
    இருவிசும்பும் இருநிலமுமாகித் தோன்றும்
கண்ணவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(5)
உருத்திரனை, உமாபதியை, உலகானானை
    உத்தமனை, நித்திலத்தை, ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப்
    பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை, நித்திலத்தின் தொத்தொப்பானை
    நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(6)
ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை
    இளமதியம் எருக்கு வானினிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத், தேவர் கோவைச்
    செம்பொன் மால் வரையானைச், சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கிறிபேசி மடவார் பெய்வளைகள் கொள்ளும்
காடவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(7)
நாரணனும் நான்முகனும் அறியாதானை
    நால் வேதத்துருவானை, நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலி கொண்டுண்ணும்
    பால்வணனைத், தீவணனைப், பகலானானை
வார்பொதியும் முலையாள்ஓர் கூறன் தன்னை
    மான்இடங்கை உடையானை, மலிவார் கண்டம்
கார்பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(8)
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை
    மதிசூடும் பெருமானை, மறையோன் தன்னை
ஏனவனை, இமவான் தன் பேதையோடும்
    இனிதிருந்த பெருமானை, ஏத்துவார்க்குத்
தேனவனைத், தித்திக்கும் பெருமான் தன்னைத்
    தீதிலா மறையோனைத், தேவர் போற்றும்
கானவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(9)
நெருப்புருவத் திருமேனி வெண்ணீற்றானை
    நினைப்பார்தம் நெஞ்சானை, நிறைவானானைத்
தருக்கழிய முயலகன்மேல் தாள் வைத்தானைச்
    சலந்தரனைத் தடிந்தோனைத், தக்கோர் சிந்தை
விருப்பவனை, விதியானை, வெண்ணீற்றானை
    விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றும்
கருத்தவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(10)
மடலாழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று
    மலர்க்கண் இடந்திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக்கருள் செய்தானைத்
    தும்பியுரி போர்த்தானைத், தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக்கோனை
    அருவரைக்கீழ் அடர்த்தானை, அருளார் கருணைக்
கடலானைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே

 

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (5):


சீகாழி

(1)
இறையவன் ஈசன் எந்தை; இமையோர் தொழுதேத்த நின்ற
கறையணி கண்டன்; வெண்தோள் அணி காதினன்; காலத்தன்று
மறைமொழி வாய்மையினான்; மலையாளொடும் மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே
(2)
சடையினன்; சாம வேதன்; சரி கோவணவன்; மழுவாள் 
படையினன்; பாய்புலித்தோல் உடையான்; மறை பல்கலைநூல்

திருத்தேவூர் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருத்தேவூர்

(1)
காடுபயில் வீடும், முடைஓடு கலன், மூடும் உடையாடை புலிதோல்
தேடுபலி ஊண், அதுவுடை வேடமிகு வேதியர் திருந்து பதிதான்
நாடகமதாட, மஞ்ஞை பாட, அரி கோடல் கைம்மறிப்ப, நலமார்
சேடுமிகு பேடைஅனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூர் அதுவே
(2)
கோளரவு கொன்றைநகு வெண்தலை எருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண் சலமகள் குலவு செஞ்சடை வரத்து இறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம் விரைக்கு மணமார்
தேளரவு தென்றல் தெருவெங்கும் நிறை ஒன்றிவரு தேவூர் அதுவே
(3)
பண்தடவு சொல்லின் மலைவல்லி உமை பங்கன், எமைஆளும் இறைவன்
எண்தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிதிருந்த இடமாம்
விண்தடவு வார்பொழில் உகுத்த நறவாடி மலர்சூடி விரையார்
சேண்தடவு மாளிகை செறிந்துதிரு ஒன்றிவளர் தேவூர் அதுவே
(4)
மாசின் மனநேசர் தமதாசை வளர் சூலதரன், மேலை இமையோர்
ஈசன், மறையோதி, எரியாடி, மிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூர் அதுவே
(5)
கானமுறு மான்மறியன், ஆனையுரி போர்வை, கனலாடல் புரிவோன்
ஏன எயிறாமை இளநாகம் வளர் மார்பில் இமையோர் தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவி பலாநிலவி வார்
தேனமுது உண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூர் அதுவே
(6)
ஆறினொடு கீறுமதி ஏறுசடை ஏறன், அடையார் நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன், எமை ஆளும் அரனூர்
வீறுமலர் ஊறுமது வேறி வளர்வாய விளைகின்ற கழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்ப இளவாளை வரு தேவூர் அதுவே
(7)
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்று நகைசெய்
எந்தனது சென்றுநிலை எந்தைதன தந்தைஅமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவைக் குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்ற விளையாடி வளர் தேவூர்அதுவே
(8)
ஓத மலிகின்ற தெனிலங்கை அரையன் மலி புயங்கள் நெரியப்
பாதமலிகின்ற விரல்ஒன்றினில் அடர்த்த பரமன் தனதிடம்
போத மலிகின்ற மடவார்கள் நடமாடலொடு பொங்கு முரவம்
சேதமலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர்அதுவே
(9)
வண்ண முகிலன்ன எழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ண மலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ண அனலங்கொள் பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடையின் மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தஇசை யாழ்மருவு தேவூர் அதுவே
(10)
பொச்சம்அமர் பிச்சை பயில் அச்சமணும் எச்சமறு போதியருமாம்
மொச்சை பயில் இச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்ச நகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * *
(11)
துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்கள்இறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கைஉமை நங்கையொரு பங்கன்அமர் தேவூர்அதன்மேல்
பைங்கமலம் அங்கணிகொள் திண்புகலி ஞானசம்பந்தன் உரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்தும்இவை வல்லவர்கள் சங்கையிலரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page