திருத்தேவூர் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருத்தேவூர்

(1)
மொழி உமைபங்கன், எம்பெருமான்
விண்ணில் வானவர் கோன், விமலன், விடையூர்தி
தெண்ணிலா மதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(2)
ஓதி மண்டலத்தோர் முழுதுய்ய வெற்பேறு
சோதி வானவன், துதிசெய மகிழ்ந்தவன், தூநீர்த்
தீதில் பங்கயம் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதிசேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(3)
மறைகளால் மிகவழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக்காலனைக் காய்ந்த வெங்கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(4)
முத்தன், சில்பலிக்கு ஊர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன்அடியார்கள்
சித்தன், மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(5)
பாடுவார் இசை, பல்பொருள் பயனுகந்தன்பால்
கூடுவார், துணைக் கொண்ட தம் பற்றறப் பற்றித்
தேடுவார் பொருளானவன், செறிபொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(6)
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள், தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(7)
வல்புயத்த அத்தானவர் புரங்களை எரியத்
தன் புயத்துறத் தடவரை வளைத்தவன், தக்க
தென்தமிழ்க் கலை தெரிந்தவர், பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(8)
தருவுயர்ந்த வெற்பெடுத்தஅத் தசமுகன் எரிந்து
வெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்து வாள் பணித்தான்
தெருவு தோறும்நல் தென்றல் வந்துலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(9)
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை, திண்திறல் இருங்களிறுரித்த எம்பெருமான்
செந்தினத்திசை அறுபதம்முரல் திருத்தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(10)
பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநம் செஞ்சடைக் கடவுள் தென்தேவூர்
ஆறுசூடியை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
(11)
அல்லலின்றி விண்ணாள்வர்கள் காழியர்க்கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்
எல்லையில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே

 

திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (18) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை:

(1)
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே
(2)
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ
அத்தன் என்று அரியோடுபிரமனும்
துத்தியம் செயநின்ற நற்சோதியே
(3)
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணி இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே
(4)
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம்
மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே
(5)
கூவலாமை குரைகடல் ஆமையைக்
கூவலோடொக்குமோ கடல் என்றல்போல்
பாவகாரிகள் பார்ப்பரிதென்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே
(6)
பேய் வனத்தமர்வானைப், பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர்முடி தன்னடிச்
சாய்வனைச், சலவார்கள் தமக்குடல்
சீவனைச் சிவனைச் சிந்தியார்களே
(7)
எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது
உருவருக்கமதாவது உணர்கிலார்
அரிஅயற்கரியானை அயர்த்துபோய்
நரி விருத்தமதாகுவர் நாடரே
(8)
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரனுரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார்கள் மனவரே
(9)
தாயினும் நல்ல சங்கரனுக்கன்பர்
ஆய உள்ளத்தமுதருந்தப் பெறார்
பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே
(10)
அரக்கன் வல்லரட்டாங்கொழித்து ஆரருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்
கருத்திலாக் கயவக் கணத்தோர்களே

 

திருமறைக்காடு – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருமறைக்காடு

(1)
கற்பொலி சுரத்தின் எரி கானினிடை மாநடமதாடி, மடவார்
இல்பலி கொளப்புகுதும் எந்தை பெருமானது இடமென்பர், புவிமேல்
மற்பொலி கலிக்கடல் மலைக்குவடெனத் திரைகொழித்த மணியை
விற்பொலி நுதல் கொடியிடைக் கணிகைமார் கவரும் வேதவனமே
(2)
பண்டிரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறில் கடைய, வந்த விடமுண்ட குழகன் தனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார்
வெண்திரைகள் செம்பவள முந்துகடல் வந்தமொழி வேதவனமே
(3)
காரியல் மெல்லோதி நதிமாதை முடிவார் சடையில் வைத்து, மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவென்பர், நெடுமாட மறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணிலம் ஒண்படக நாளும்இசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே
(4)
நீறு திருமேனியின் மிசைத்தொளிபெறத் தடவி வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்த பதியாம்
ஊறுபொருள் இன்தமிழ் இயற்கிளவி தேருமட மாதர்உடனார்
வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை தேரும்எழில் வேதவனமே
(5)
கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொடு இடக்கை படகம்
எத்தனை உலப்பில் கருவித் திரள்அலம்ப, இமையோர்கள் பரச
ஒத்தற மிதித்து நடமிட்ட ஒருவர்க்கு இடமதென்பர், உலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே
(6)
மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையில் எழுந்தகதிர் தாரகை மடங்க அனலாடும் அரனூர்
சோலையின் மரங்கள்தொறு  மிண்டியின வண்டுமது உண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே
(7)
வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலை வளைத்து
அஞ்சகம் அவித்த அமரர்க்கமரன் ஆதி பெருமானது இடமாம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர் முனிவக்கண நிறைந்து மிடை வேதவனமே
(8)
முடித்தலைகள் பத்துடை முருட்டுரு அரக்கனை நெருக்கி விரலால்
அடித்தலமுன் வைத்தலமரக் கருணை வைத்தவன் இடம், பலதுயர்
கெடுத்தலை நினைத்தறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே
(9)
வாசமலர் மேவியுறை வானு நெடுமாலும் அறியாத நெறியைக்
கூசுதல் செயாத  அமணாதரொடு தேரர் குறுகாத அரனூர்
காசுமணி வார்கனக நீடுகடலோடு திரைவார் துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே
(10)
(11)
மந்தமுரவம் கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன மேவுசிவன் இன்னருளினால்
சந்தமிவை தண்தமிழின் இன்னிசையெனப் பரவு பாடல்உலகில்
பந்தனுரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வானுலகமே

 

திருமறைக்காடு – சம்பந்தர் தேவாரம் (4):

<– திருமறைக்காடு

(1)
வேயுறு தோளிபங்கன், விடமுண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(2)
என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க, எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொடுஆறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(3)
உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து, உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(4)
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(5)
நஞ்சணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடு நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(6)
வாள்வரி அதளதாடை, வரிகோவணத்தர், மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(7)
செப்பிளமுலை நன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும், வாத மிகையான பித்தும், வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(8)
வேள்பட விழிசெய்து, அன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(9)
பலபல வேடமாகும் பரனாரி பாகன், பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலு மறையோடு தேவர் வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
(10)
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல, அவைநல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே
(11)
தேனமர் பொழில்கொள்ஆலை, விளைசெந்நெல் துன்னி, வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

 

திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (17) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

பாவநாசத் திருக்குறுந்தொகை:

(1)
பாவமும் பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந்தாடும் அவன்கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்குமின்
காவலாளன் கலந்தருள் செய்யுமே
(2)
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஒங்கு மாகடலோத நீராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே
(3)
பட்டர் ஆகிலென், சாத்திரம் கேட்கிலென்
இட்டும் அட்டியும் மீதொழில் பூணிலென்
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென்
இட்டம் ஈசன் எனாதவர்க்கில்லையே
(4)
வேதம் ஓதிலென், வேள்விகள் செய்யிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி அங்கமோர் ஆறும் உணரில்என்
ஈசனை உள்குவார்க்கன்றியில்லையே
(5)
காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி அடைந்தது வேட்கிலென்
ஏலஈசன் என்பார்க்கன்றியில்லையே
(6)
கான நாடு கலந்து திரியிலென்
ஈனமின்றி இருந்தவம் செய்யிலென்
ஊனை உண்டல் ஒழிந்துவான் நோக்கிலென்
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கில்லையே
(7)
கூட வேடத்தராகிக் குழுவிலென்
வாடி ஊனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாடலாளர்க்கல்லால் பயனில்லையே
(8)
நன்று நோற்கிலென், பட்டினி ஆகிலென்
குன்றமேறி இருந்தவம் செய்யிலென்
சென்று நீரில் குளித்துத் திரியிலென்
என்றும் ஈசன் என்பார்க்கன்றி இல்லையே
(9)
கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடினாலும், அரனுக்கு அன்பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே
(10)
மற்று நற்றவம் செய்து வருந்திலென்
பொற்றை உற்றெடுத்தான் உடல் புக்கிறக்கு
உற்ற நற்குரையார் கழல் சேவடி
பற்றிலாதவர்க்குப் பயன் இல்லையே

 

திருநறையூர்ச் சித்தீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
நேரியனாகும் அல்லன், ஒருபாலும் மேனி அரியான், முனாய ஒளியான்
நீரியல் காலுமாகி, நிறை வானுமாகி, உறு தீயுமாய நிமலன்
ஊரியல் பிச்சை பேணி, உலகங்கள் ஏத்த நல்குண்டு, பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே
(2)
இட மயிலன்ன சாயல் மடமங்கை தன்கையெதிர் நாண்பூண வரையில்
கடும் அயிலம்பு கோத்து எயில் செற்றுகந்து அமரர்க்களித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை எனநின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நட மயிலால நீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே
(3)
சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான்
ஈடகமான நோக்கி இடுபிச்சை கொண்டு படு பிச்சனென்று பரவத்
தோடகமாய் ஒர் காதும், ஒருகாதிலங்கு குழை தாழ, வேழ உரியன்
நாடகமாக ஆடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்பன் அவனே
(4)
சாயனன், மாதொர் பாகன், விதியாய சோதி, கதியாக நின்ற கடவுள்
ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன், இருளாய கண்டன், அவனித்
தாயென நின்றுகந்த தலைவன், விரும்பு மலையின்கண் வந்து தொழுவார்
நாயகன் என்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்பன் அவனே
(5)
நெதிபடு மெய், எம் ஐயன், நிறைசோலை சுற்றி நிகழ்அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க்கொருத்தன், எமர் சுற்றமாய இறைவன்
மதிபடு சென்னி மன்னு சடைதாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட உந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே
(6)
கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ் சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதஓசை அகலங்கம் ஆறின் பொருளான ஆதிஅருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர் தூவியேத்து நறையூரின் நம்பன் அவனே
(7)
ஒளிர் தருகின்ற மேனியுரு எங்கும் அங்கம்அவையார ஆடலரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி ஆடும் விகிர்தன், விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ, வேதம் எழிலார வென்றி அருளும்
நளிர்மதி சேருமாட மடவார்களாரும் நறையூரின் நம்பன் அவனே
(8)
அடல் எருதேறுகந்த அதிரும் கழல்கள், எதிரும் சிலம்பொடிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன், முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோளனைத்தும் முடிபத்திறுத்தும் இசைகேட்டிரங்கி, ஒருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாளவல்ல நறையூரின் நம்பன் அவனே
(9)
குலமலர் மேவினானும், மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்று
இலபல எய்தொணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச, அருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்பன் அவனே
(10)
துவர்உறுகின்ற ஆடை, உடல்போர்த்துழன்ற அவர்தாமும், அல்ல சமணும்
கவருறு சிந்தையாளர் உரை நீத்துகந்த பெருமான், பிறங்கு சடையன்
தவமலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளி பொன்செய் மாட நறையூரின் நம்பன் அவனே
(11)
கானலுலாவி ஓதம் எதிர்மல்கு காழிமிகு பந்தன் முந்தியுணர
ஞானமுலாவு சிந்தை அடிவைத்துகந்த நறையூரின் நம்பன் அவனை
ஈனமிலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ்மாலை பத்து நினைவார்
வானநிலாவ வல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யும் மிகவே

திருப்பள்ளியின் முக்கூடல்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
    அயனொடுமால் அறியாத ஆதியானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச்
    சங்கரனைத் தன்னொப்பார் இல்லாதானை
நீரானைக் காற்றானைத் தீயானானை
    நீள்விசும்பாய் ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(2)
விடையானை, விண்ணவர்கள் எண்ணத்தானை
    வேதியனை, வெண்திங்கள் சூடும் சென்னிச்
சடையானைச், சாமம்போல் கண்டத்தானைத்
    தத்துவனைத், தன்னொப்பார் இல்லாதானை
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க
    அடுகணை கோத்தெய்தானை, அயில்கொள் சூலப்
படையானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(3)
பூதியனைப், பொன்வரையே போல்வான் தன்னைப்
    புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை, வெண்காடு மேயான் தன்னை
    வெள்ளேற்றின் மேலானை, விண்ணோர்க்கெல்லாம்
ஆதியனை, ஆதிரை நன்னாளான் தன்னை
    அம்மானை, மைம்மேவு கண்ணியாளோர்
பாதியனைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(4)
போர்த்தானை ஆனையின் தோல், புரங்கள் மூன்றும்
    பொடியாக எய்தானைப், புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை
    மறிகடலுள் நஞ்சுண்டு வானோர் அச்சம்
தீர்த்தானைத், தென்திசைக்கே காமன் செல்லச்
    சிறிதளவில் அவனுடலம் பொடியா ஆங்கே
பார்த்தானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(5)
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
    அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்
கடிந்தானைக், கார்முகில்போல் கண்டத்தானைக்
    கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமியாலே
தடிந்தானைத், தன்னொப்பார் இல்லாதானைத்
    தத்துவனை, உத்தமனை, நினைவார் நெஞ்சில்
படிந்தானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(6)
கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளம்
    கனலாடு திருமேனிக் கமலத்தோன்தன்
சிரந்தாங்கு கையானைத், தேவதேவைத்
    திகழொளியைத், தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை, மண்ணாய் விண்ணாய்
    மறிகடலாய் மால்விசும்பாய் மற்றுமாகிப்
பரந்தானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(7)
நதியாரும் சடையானை, நல்லூரானை
    நள்ளாற்றின் மேயானை, நல்லத்தானை
மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூரானை
    மறைக்காடு மேயானை, ஆக்கூரானை
நிதியாளன் தோழனை, நீடூரானை
    நெய்த்தான மேயானை, ஆரூர்என்னும்
பதியானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(8)
நற்றவனை, நான்மறைகள் ஆயினானை
    நல்லானை, நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனைச், செஞ்சடைமேல் திங்கள் சூடும்
    திருவாரூர்த் திருமூலட்டானம் மேய
கொற்றவனைக், கூரரவம் பூண்டான் தன்னைக்
    குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க்கென்றும்
பற்றவனைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(9)
ஊனவனை, உடலவனை, உயிரானானை
    உலகேழும் ஆனானை, உம்பர் கோவை
வானவனை, மதிசூடும் வளவியானை
    மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக், கயிலாய மலையுளானைக்
    கலந்துருகி நைவார்தம் நெஞ்சினுள்ளே
பானவனைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே
(10)
தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித்
    தடவரையை இருபதுதோள் தலையினாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி
    எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடும் கூர்வாள் தன்னைக்
    குரைகழலால் கூற்றுவனை மாள அன்று
படுத்தானைப், பள்ளியின் முக்கூடலானைப்
    பயிலாதே பாழேநான் உழன்றவாறே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page