ஆவூர்ப்பசுபதீச்சரம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
புண்ணியர், பூதியர், பூதநாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர் என்றென்று காதலாளர் கை தொழுதேத்த இருந்த ஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(2)
முத்தியர், மூப்பிலர், ஆப்பினுள்ளார், முக்கணர், தக்கன்தன் வேள்விசாடும்
அத்தியர் என்றென்று அடியர்ஏத்தும் ஐயன் அணங்கொடுஇருந்த ஊராம்
தொத்தியலும் பொழில் மாடுவண்டு துதைந்தெங்கும் தூமதுப் பாயக், கோயில்
பத்திமைப் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(3)
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார், போம்வழி வந்திழி ஏற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோர்ஏத்தும் இறையவர்என்றும் இருந்த ஊராம்
தெங்குயர் சோலைசேர் ஆலை சாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(4)
தேவியொர் கூறினர், ஏறதேறும் செலவினர், நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர், அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூவியலும் பொழில் வாசம்வீசப் புரிகுழலார் சுவடொற்றி முற்றப்
பாவியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(5)
இந்தணையும் சடையார், விடையார், இப்பிறப்பென்னை அறுக்க வல்லார்
வந்தணைந்தின்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னியிருந்த ஊராம்
கொந்தணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும்வீதிப்
பந்தணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(6)
குற்றமறுத்தார், குணத்தினுள்ளார், கும்பிடுவார் தமக்கன்பு செய்வார்
ஒற்றை விடையினர், நெற்றிக் கண்ணார் உறைபதியாகும், செறிகொள் மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவிபாட நிதான நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(7)
நீறுடையார், நெடுமால் வணங்கு நிமிர் சடையார், நினைவார் தம்உள்ளம்
கூறுடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊராம்
தாறுடை வாழையில் கூழைமந்தி தகு கனிஉண்டு மிண்டிட்டு இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(8)c
வெண்தலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடையார், விறலார் அரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தர் இடம், வளமோங்கி எங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின் மிக்கார் கதியருள் என்று கையாரக் கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(9)
மாலும் அயனும் வணங்கி நேட, மற்றுஅவருக்கு எரியாகிநீண்ட
சீலம் அறிவரிதாகி நின்ற செம்மையினார் அவர் சேரும்ஊராம்
கோல விழாவின் அரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலெனவே மொழிந்தேத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(10)
பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையராம் சமண் சாக்கியர்கள்
தன்னியலும் உரை கொள்ளகில்லாச் சைவர் இடம், தளவேறு சோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே
(11)
எண்திசையாரும் வணங்கியேத்தும் எம்பெருமானை, எழில்கொள் ஆவூர்ப்
பண்டுரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சரத்து ஆதி தன் மேல்
கண்டல்கள் மிண்டிய கானல்காழிக் கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டு இனிதாஇசை பாடியாடிக் கூடுமவர் உடையார்கள் வானே

 

தென்குடித்திட்டை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே
(2)
மகரமாடும் கொடி மன்மத வேள்தனை
நிகரலாகா நெருப்பெழ விழித்தான் இடம்
பகரவாள் நித்திலம் பன் மகரத்தொடும்
சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே
(3)
கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே
(4)
உண்ணிலா ஆவியாய் ஓங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேத வேதாந்தன் ஊர்
எண்ணிலார் எழில்மணிக் கனக மாளிகை இளம்
தெண்ணிலா விரிதரும் தென்குடித் திட்டையே
(5)
வருந்தி வானோர்கள் வந்தடைய, மாநஞ்சு தான்
அருந்தி, ஆரமுதவர்க்கருள் செய்தான் அமரும்ஊர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே
(6)
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றிமால்
கூறினார், அமர்தரும் குமரவேள் தாதையூர்
ஆறினார், பொய்யகத்தை உணர்வெய்தி மெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே
(7)
கானலைக்கும் அவன் கண்இடந்து அப்பநீள்
வானலைக்கும் தவத்தேவு வைத்தான் இடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக்கும் வயல் தென்குடித் திட்டையே
(8)
மாலொடும் பொருதிறல் வாளரக்கன் நெரிந்து
ஓலிடும் படி விரலொன்று வைத்தான் இடம்
காலொடும் கனக மூக்குடன் வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே
(9)
நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்தடி தொழச்
சீரணங்கும் புகழ்த் தென்குடித் திட்டையே
(10)
குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத்தே இடும் பற்றுவிட்டீர் தொழும்
வண்டிரைக்கும் பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்திரைத் தண்புனல் தென்குடித் திட்டையே
(11)
தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தரும் காழியுள்
ஞானமார் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்கில்லையாம் பாவமே

 

அவளிவணல்லூர் – அப்பர் தேவாரம்:

<– அவளிவணல்லூர்

(1)
தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை உடையனாகி வெடுவெடுத்தெழுந்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே
(2)
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிகச் சழக்காயிற்றென்று
செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையுமென்ன
நம்பினார் என்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினார் அழிய எய்தார் அவளிவணல்லூராரே
(3)
கீழ்ப்படக் கருதலாமோ கீர்த்திமை உள்ளதாகில்
தோள்பெரு வலியினாலே தொலைப்பனான் மலையை என்று
வேள்பட வைத்தவாறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார் அவளிவணல்லூராரே
(4)
நிலைவலம் வல்லனல்லன் நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலம் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை அன்று
அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே
(5)
தவ்வலி ஒன்றனாகித் தனதொரு பெருமையாலே
மெய்வ்வலி உடையனென்று மிகப்பெரும் தேரையூர்ந்து
செவ்வலி கூர்விழியால் சிரம்பத்தால் எடுக்குற்றானை
அவ்வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே
(6)
நன்மை தான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்தலுற்றுக்
கன்மையான் மலையைஓடிக் கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே
(7)
கதம்படப் போதுவார்கள் போதும்அக் கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிருமென்று
மதம்படு மனத்தனாகி வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத்துருவு செய்தார் அவளிவணல்லூராரே
(8)
நாடு மிக்குழிதர்கின்ற நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக்கென்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே
பாடி மிக்குய்வன் என்று பணியநல் திறங்கள் காட்டி
ஆடுமிக்கரவம் பூண்டார் அவளிவணல்லூராரே
(9)
ஏனமாய் இடந்த மாலும், எழில்தரு முளரியானும்
ஞானம்தான் உடையராகி நன்மையை அறிய மாட்டார்
சேனம்தான் இலாஅரக்கன் செழுவரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே
(10)
ஊக்கினான் மலையை ஓடி உணர்விலா அரக்கன் தன்னைத்
தாக்கினான் விரலினாலே தலைபத்தும் தகர ஊன்றி
நோக்கினால் அஞ்சத் தன்னை நோன்பிற ஊன்று சொல்லி
ஆக்கினார் அமுதமாக அவளிவணல்லூராரே

 

திருவாவடுதுறை – அப்பர் தேவாரம் (5):

<– திருவாவடுதுறை

(1)
திருவேஎன் செல்வமே தேனே, வானோர்
    செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நற்சோதி மிக்க
உருவே, என்உறவே, என் ஊனே, ஊனின்
    உள்ளமே, உள்ளத்தினுள்ளே நின்ற
கருவே, என் கற்பகமே, கண்ணே கண்ணில்
    கருமணியே, மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(2)
மாற்றேன் எழுத்தஞ்சும் எந்தன் நாவின்
    மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன், பிறதெய்வம் எண்ணா நாயேன்
    எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
    வேதனைக்கே இடங்கொடுத்து நாளுநாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(3)
வரையார் மடமங்கை பங்கா, கங்கை
    மணவாளா, வார்சடையாய், நிந்தன் நாமம்
உரையா உயிர்போகப் பெறுவேனாகில்
    உறுநோய் வந்தெத்தனையும் உற்றால்என்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
    காதலித்து நின்கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா, அடியேனை அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(4)
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
    சிலைவளைவித்து, உமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்தாங்கு இரும்பிடிமேல் கைவைத்தோடும்
    களிறுரித்த கங்காளா, எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
    நில்லா உயிரோம்பு நீதனேன்நான்
அலுத்தேன் அடியேனை அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(5)
நறுமா மலர்கொய்து நீரில் மூழ்கி
    நாள்தோறும் நின்கழலே ஏத்தி வாழ்த்தித்
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச்
    சூழுலகில் ஊழ்வினை வந்துற்றால் என்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
    ஒலிதிரைநீர்க் கடல் நஞ்சுண்டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(6)
கோன்நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு
    கொழு மலரான் தன்சிரத்தைக் கையிலேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
    கங்காள வேடராய் எங்கும் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக் கேடனேன்
    நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(7)
உழையுரித்த மானுரிதோல் ஆடையானே
    உமையவள்தம் பெருமானே, இமையோர் ஏறே
கழையிறுத்த கருங்கடல் நஞ்சுண்ட கண்டா
    கயிலாய மலையானே, உன்பால் அன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நிந்தன்
    கடனன்றே, பேரருள்உன் பாலதன்றே
அழையுறுத்து மாமயில்கள் ஆலும் சோலை
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(8)
உலந்தார் தலைகலன் ஒன்றேந்தி வானோர்
    உலகம் பலிதிரிவாய், உன்பால் அன்பு
கலந்தார் மனங்கவரும் காதலானே
    கனலாடும் கையவனே, ஐயா, மெய்யே
மலந்தாங்கு உயிர்ப்பிறவி மாயக்காய
    மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
அலந்தேன், அடியேனை அஞ்சேல் என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(9)
பல்லார்ந்த வெண்தலை கையிலேந்திப்
    பசுவேறி ஊரூரன் பலிகொள்வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயும் எல்லாம்
    கரிகாட்டில் ஆட்டுகந்தீர், கருதீராகில்
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும்
    ஏழைஅமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு
அல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே
(10)
துறந்தார்தம் தூநெறிக்கண் சென்றேன் அல்லேன்
    துணைமாலை சூட்டநான் தூயேன் அல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசின் அல்லால்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிஇலங்கைக் கோமான் தன்னைச்
    செறுவரைக்கீழ் அடர்த்தருளிச் செய்கையெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சேல்என்னாய்
    ஆவடுதண்துறை உறையும் அமரர்ஏறே

சக்கரப்பள்ளி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
படையினார் வெண்மழுப், பாய்புலித்தோல் அரை
உடையினார், உமையொரு கூறனார், ஊர்வதோர்
விடையினார், வெண்பொடிப் பூசியார், விரிபுனல்
சடையினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே
(2)
பாடினார் அருமறை, பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன்எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி, நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே
(3)
மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே
(4)
நலமலி கொள்கையார், நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர், வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே
(5)
வெந்தவெண் பொடியணி வேதியர், விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோடமரும் ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடணை புனல் சக்கரப் பள்ளியே
(6)
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார், உறைவிடம் சக்கரப் பள்ளியே
(7)
பாரினார் தொழுதெழு பரவு பல்லாயிரம்
பேரினார், பெண்ணொரு கூறனார், பேரொலி
நீரினார் சடைமுடி, நிரைமலர்க் கொன்றையம்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே
(8)
முதிரிலா வெண்பிறை சூடினார், முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார், வரை தனால்
அதிரிலா வல்லரக்கன் வலி வாட்டிய
சதிரினார், வளநகர் சக்கரப் பள்ளியே
(9)
துணிபடு கோவணம், சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர், பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசையானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே
(10)
உடம்புபோர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே
(11)
தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுதல் அவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவைசொலப் பறையும் மெய்ப்பாவமே

 

திருவாவடுதுறை – அப்பர் தேவாரம் (4):

<– திருவாவடுதுறை

(1)
நிறைக்க வாலியள் அல்லள் இந்நேரிழை
மறைக்க வாலியள் அல்லள் இம்மாதராள்
பிறைக் கவாலம் பெரும்புனல் !ஆவடு
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே
(2)
தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்இறை
அளவு கண்டிலள் ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே
(3)
பாதிப் பெண்ணொரு பாகத்தன், பன்மறை
ஓதி, என்னுளம் கொண்டவன், ஒண்பொருள்
ஆதி, ஆவடுதண்துறை மேவிய
சோதியே சுடரேஎன்று சொல்லுமே
(4)
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே
(5)
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமுதே எனும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்துறை
ஒருவன் என்னை உடையகோ என்னுமே
(6)
குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடுதண்துறையா எனக்
கழலும் கைவளை காரிகையாளுக்கே
(7)
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்சமென் இறுமாந்திவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள் ஆவடு தண்துறை
மஞ்சனோடு இவள்ஆடிய மையலே
(8)
பிறையும் சூடி, நற்பெண்ணோடு ஆணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்துறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே
(9)
வையந்தான் அளந்தானும், அயனுமாய்
மெய்யைக் காணலுற்றார்க்கு அழலாயினான்
ஐயன் ஆவடு தண்துறையா எனக்
கையில் வெள்வளையும் கழல்கின்றதே
(10)
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக்கன் வலி வீட்டினான்
அக்கணிந்தவன் ஆவடு தண்துறை
நக்கன்என்னும் இந்நாணிலி காண்மினே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page