திருப்பனையூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பனையூர்

(1)
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின்றவன் ஊராம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே
(2)
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊராம்
கள் நின்றெழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலிசெய் பனையூரே
(3)
அலரும் எறி செஞ்சடை தன்மேல்
மலரும் பிறையொன்றுடையான் ஊர்
சிலரென்றும் இருந்து அடிபேணப்
பலரும் பரவும் பனையூரே
(4)
இடியார் கடல் நஞ்சமுதுண்டு
பொடியாடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ, மன்னவர் ஏத்தப்
படியார் பணியும் பனையூரே
(5)
அறையார் கழல் மேல் அரவாட
இறையார் பலிதேர்ந்தவன் ஊராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையார் ஒலிசெய் பனையூரே
(6)
அணியார் தொழவல்லவர் ஏத்த
மணியார் மிடறொன்றுடையான் ஊர்
தணியார் மலர் கொண்டு இருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே
(7)
அடையாதவர் மூவெயில் சீறும்
விடையான், விறலார் கரியின் தோல்
உடையானவன், எண் பலபூதப்
படையான் அவன்ஊர் பனையூரே
(8)
இலகும் முடிபத்துடையானை
அலல் கண்டருள் செய்த எம்அண்ணல்
உலகில் உயிர்நீர் நிலமற்றும்
பல கண்டவன் ஊர் பனையூரே
(9)
வரம் உன்னி மகிழ்ந்தெழுவீர்காள்
சிரமுன் அடிதாழ வணங்கும்
பிரமன்னொடு மாலறியாத
பரமன் உறையும் பனையூரே
(10)
அழிவல் அமணரொடு தேரர்
மொழிவல்லன சொல்லிய போதும்
இழிவில்லதொர் செம்மையினான் ஊர்
பழியில்லவர் சேர் பனையூரே
(11)
பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞான சம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊரூர் நினைவார் உயர்வாரே

 

திருவாவடுதுறை – அப்பர் தேவாரம் (3):

<– திருவாவடுதுறை

(1)
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை
    ஞானப் பெருங்கடலை, நன்மை தன்னைக்
கம்பனைக், கல்லால் இருந்தான் தன்னைக்
    கற்பகமாய் அடியார்கட்கருள் செய்வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளுமுத்தைத்
    திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(2)
மின்னானை, மின்னிடைச்சேர் உருமினானை
    வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பார் இல்லாதானைத்
    தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி
என்னானை, எந்தை பெருமான் தன்னை
    இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(3)
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானைப்
    பவளக் கொழுந்தினை மாணிக்கத்தின்
தொத்தினைத், தூநெறியாய் நின்றான் தன்னைச்
    சொல்லுவார் சொற்பொருளின் தோற்றமாகி
வித்தினை, முளைக்கிளையை, வேரைச் சீரை
    வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(4)
பேணியநல் பிறைதவழ் செஞ்சடையினானைப்
    பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டிங்கு
    இளைக்கின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியைத், தொண்டனேன் தூய சோதிச்
    சுலாவெண் குழையானைச், சுடர்பொற் காசின்
ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(5)
ஒருமணியை, உலகுக்கோர் உறுதி தன்னை
    உதயத்தின் உச்சியை, உருமானானைப்
பருமணியைப் பாலோடு அஞ்சாடினானைப்
    பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேனதாகித்
    தீங்கரும்பின் இன்சுவையைத் திகழும் சோதி
அருமணியை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(6)
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை
    எல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக், கூற்றம் உதைத்தான் தன்னைக்
    குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை, நீளரவொன்று ஆர்த்தான் தன்னை
    நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(7)
கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
    கடல்வரை வான்ஆகாசம் ஆனான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத், திகழும் முத்தைத்
    திங்களை ஞாயிற்றைத் தீயானானை
எம்மானை என்மனமே கோயி லாக
    இருந்தானை, என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(8)
மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை
    வெள்ளிடையைத் தண்ணிழலை, வெந்தீ ஏந்தும்
கையானைக், காமனுடல் வேவக் காய்ந்த
    கண்ணானைக், கண்மூன்றுடையான் தன்னைப்
பையாடு அரவமதி உடனே வைத்த
    சடையானைப், பாய்புலித்தோல் உடையான் தன்னை
ஐயானை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(9)
வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை
    விசயனைமுன் அசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடு நற்சோதி தன்னைச்
    சூலப் படையானைக், காலன் வாழ்நாள்
மாண்டோட உதைசெய்த மைந்தன் தன்னை
    மண்ணவரும் விண்ணவரும் வணங்கியேத்தும்
ஆண்டானை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(10)
பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
    பாடலோடு ஆடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலையானைக்
    கோலமா நீலமிடற்றான் தன்னைச்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத்
    திருமார்பில் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
(11)
தரித்தானைத் தண்கடல் நஞ்சுண்டான் தன்னைத்
    தக்கன்தன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப், பிறைதவழ்செஞ் சடையினானைப்
    பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத்தானை
    நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை, ஆவடுதண்துறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே

கருவிலிக் கொட்டிட்டை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு மயங்கிப் பரியாதுநீர்
கட்டிட்ட வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே
(2)
ஞாலம் மல்கு மனிதர்காள், நாள்தொறும்
ஏல மாமலரோடு இலை கொண்டுநீர்
காலனார் வருதல்முன், கருவிலிக்
கோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே
(3)
பங்கமாயின பேசப் பறைந்துநீர்
மங்குமா நினையாதே, மலர்கொடு
கங்கை சேர்சடையான் தன் கருவிலிக்
கொங்குவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே
(4)
வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கருள் செய்த வெண்
காடனார் உறைகின்ற கருவிலிக்
கோடு நீள்பொழில் கொட்டிட்டை சேர்மினே
(5)
உய்யுமாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரையான், படையார்மழுக்
கையினான் உறைகின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே
(6)
ஆற்றவும் அவலத்து அழுந்தாதுநீர்
தோற்றும் தீயொடு நீர்நிலம் தூவெளி
காற்றுமாகி நின்றான் தன் கருவிலிக்
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே
(7)
நில்லா வாழ்வு நிலைபெறும் என்றெண்ணிப்
பொல்லாவாறு செயப் புரியாதுநீர்
கல்லாரும் மதில்சூழ் தண் கருவிலிக்
கொல்லேறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே
(8)
பிணித்த நோய்ப் பிறவிப் பிரிவெய்துமாறு
உணர்த்தலாம் இது கேண்மின், உருத்திர
கணத்தினார் தொழுதேத்தும் கருவிலிக்
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே
(9)
நம்புவீர்இது கேண்மின்கள், நாள்தொறும்
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும்
ஏகம்பனார் உறைகின்ற கருவிலிக்
கொம்பனார் பயில் கொட்டிட்டை சேர்மினே
(10)
பாருளீர்இது கேண்மின், பருவரை
பேருமாறு எடுத்தானை அடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே

 

திருவாரூர் – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவாரூர்

(1)
சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ முத்தியாகுமே
(2)
பிறவி அறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவாதேத்துமின், துறவியாகுமே
(3)
துன்பம் துடைப்பீர்காள், அன்பன் அணிஆரூர்
நன்பொன் மலர்தூவ இன்பமாகுமே
(4)
உய்யல் உறுவீர்காள்; ஐயன் ஆரூரைக்
கையினால் தொழ நையும் வினைதானே
(5)
பிண்டம் அறுப்பீர்காள் , அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ விண்டு வினைபோமே.
(6)
பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ நேசமாகுமே
(7)
வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ வையம் அமுதாமே
(8)
அரக்கன் ஆண்மையை நெருக்கினான், ஆரூர்
கரத்தினால் தொழத் திருத்தமாகுமே
(9)
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளும் அவர்தம்மேல் விள்ளும் வினைதானே
(10)
கடுக்கொள் சீவரை அடக்கினான், ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே
(11)
சீரூர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார் பேரார் இன்பமே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (14):

<– திருவீழிமிழலை

(1)
புள்ளித் தோல்ஆடை, பூண்பது நாகம், பூசு சாந்தம் பொடிநீறு
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டம், காளியைக் குணஞ்செய் கூத்துடையோன்
அள்ளல் கார்ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க, முள் தாழைகள்ஆனை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில் வீழிமிழலையான் என வினைகெடுமே
(2)
இசைந்தவாறு அடியார் இடுதுவல், வானோர் இழுகு சந்தனத்திளம் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய், கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி அலர்கயல் முதலோடு அடுத்தரிந்தெடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினைகெடுமே
(3)
நிருத்தன், ஆறங்கன், நீற்றன், நான்மறையன், நீலமார் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்றெல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன், கேடிலி, உமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை, சிறியவர் அறிவினில் மிக்க
விருத்தரை அடிவீழ்ந்து இடம்புகும் வீழிமிழலையான் என வினைகெடுமே
(4)
தாங்கரும் காலம் தவிர வந்திருவர் தம்மொடும் கூடினார் அங்கம்
பாங்கினால் தரித்துப், பண்டுபோல் எல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள் பூங்கமுகு தெங்கிளம் கொடிமாச் செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி மிழலையான் என வினைகெடுமே
(5)
கூசுமா மயானம் கோயில், வாயில்கண் குட வயிற்றன சில பூதம்
பூசுமா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நல் பொங்கரவு அரையோன்
வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலரணைந்தெழுந்த வான்தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழிமிழலையான் என வினைகெடுமே
(6)
பாதியோர் மாதர், மாலுமோர் பாகர், பங்கயத்தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார், அமரர்கட்கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர், பூமகன்அனைய
வேதியர் வேதத்தொலியறா வீழிமிழலையான் என வினைகெடுமே
(7)
தன்தவம் பெரிய சலந்தரன் உடலன் தடிந்த சக்கரம் எனக்கருள் என்று
அன்றரி வழிபட்டிழிச்சிய விமானத்திறையவன், பிறையணி சடையன்
நின்ற நாள் காலையிருந்த, நாள்மாலை கிடந்த, மண்மேல் வருகலியை
வென்ற வேதியர்கள் விழாவறா வீழிமிழலையான் என வினைகெடுமே
(8)
கடுத்த வாளரக்கன் கைலை அன்றெடுத்த கரமும் சிர நெரிந்தலற
அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்துரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்
படித்த நான்மறை கேட்டிருந்த பைங்கிளிகள் பதங்களை ஓதப்பாடிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என வினைகெடுமே
(9)
அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டமண் கெண்டியும் காணா
முளைஎரியாய மூர்த்தியைத், தீர்த்த முக்கண்எம் முதல்வனை, முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம் தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினைகெடுமே
(10)
கஞ்சிப் போதுடையார் கையில் கோசாரக் கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித் தேவிரிய எழுந்த நஞ்சதனை உண்டு அமரர்க்கு அமுதருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழிமிழலையான் என வினைகெடுமே
(11)
வேந்தர் வந்திறைஞ்ச, வேதியர் வீழி மிழலையுள், விண்ணிழி விமானத்து
ஏய்ந்ததன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானைத்
தோய்ந்தநீர்த் தோணிபுரத்துறை மறையோன் தூமொழி ஞானசம்பந்தன்
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (12):

<– திருவீழிமிழலை

(1)
வேலினேர்தரு கண்ணினாள் உமைபங்கன், அங்கணன், மிழலை மாநகர்
ஆலநீழலின் மேவினான் அடிக்கன்பர் துன்பிலரே
(2)
விளங்கு நான்மறை வல்லவேதியர் மல்கு சீர்வளர் மிழலையான் அடி
உளங்கொள்வார்தமை உளங்கொள்வார், வினை ஒல்லை ஆசறுமே
(3)
விசையினோடெழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன், மிழலை மாநகர்
இசையும் ஈசனை நசையின்மேவினால் மிசைசெயா வினையே
(4)
வென்றிசேர்கொடி மூடுமாமதில் மிழலைமாநகர் மேவிநாள்தொறும்
நின்றஆதிதன் அடிநினைப்பவர் துன்பம் ஒன்றிலரே
(5)
போதகம்தனை உரிசெய்தோன், புயனேர் வரும்பொழில் மிழலை மாநகர்
ஆதரம் செய்த அடிகள் பாதமலால் ஓர்பற்றிலமே
(6)
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார் அடிதொழுவர் மேல்வினை நாள்தொறும் கெடுமே
(7)
போரணாவு முப்புரமெரித்தவன், பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே
(8)
இரக்கமில் தொழில் அரக்கனார்உடல் நெருக்கினான், மிகு மிழலையான்அடி
சிரக்கொள் பூவென ஒருக்கினார்புகழ் பரக்கு நீள்புவியே
(9)
துன்றுபூமகன் பன்றியானவன் ஒன்றும்ஓர்கிலா மிழலையான்அடி
சென்றுபூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே
(10)
புத்தர்கைச் சமண் பித்தர் பொய்க்குவை வைத்த வித்தகன், மிழலைமாநகர்
சித்தம் வைத்தவர் இத்தலத்தினுள் மெய்த் தவத்தவரே
(11)
சந்தமார்பொழில் மிழலை ஈசனைச் சண்பை ஞானசம்பந்தன் வாய்நவில்
பந்தமார் தமிழ் பத்தும் வல்லவர் பத்தராகுவரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page