திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (13):

<– திருவீழிமிழலை

(1)
துன்றுகொன்றை நம் சடையதே, தூயகண்ட நஞ்சடையதே
கன்றின் மான்இடக் கையதே, கல்லின் மான் இடக்கையதே
என்றும் ஏறுவது இடவமே, என்னிடைப் பலி இடவமே
நின்றதும் மிழலையுள்ளுமே, நீரெனைச் சிறிதும் உள்ளுமே
(2)
ஓதி வாயதும் மறைகளே, உரைப்பதும் பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே, பணிகின்றேன் மிகும்ஆதையே
காது சேர் கனங்குழையரே, காதலார் கனம் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா, மிழலை மேவிய வேதியா
(3)
பாடுகின்ற பண் தாரமே, பத்தரன்ன பண்டாரமே
சூடுகின்றது மத்தமே, தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே, நின்னரைத் திகழ்ந்தது அக்கதே
நாடுசேர் மிழலையூருமே, நாக நஞ்சழலை ஊருமே
(4)
கட்டுகின்ற கழல்நாகமே, காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டமாவது இசை பாடலே, இசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே, குலாயசீர் மிழலை வாணனே
நட்டமாடுவது சந்தியே, நான்உய்தற்கு இரவு சந்தியே
(5)
ஓவிலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் ஆணையே, அருளின் நின்ன பொற்தாள் ஆணையே
பாவியாது உரை மெய்யிலே, பயின்ற நின்னடி மெய்யிலே
மேவினான்விறல் கண்ணனே, மிழலை மேய முக்கண்ணனே
(6)
வாய்ந்த மேனி எரி வண்ணமே, மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே, கடுநடம் செயும் காலனே
போந்தது எம்மிடை இரவிலே, உம்மிடைக் கள்வம் இரவிலே
வேய்ந்ததும் மிழலை என்பதே, விரும்பியே அணிவது என்பதே
(7)
அப்பியன்ற கண் ஐயனுமே, அமரர் கோமகனும் அயனுமே
ஒப்பில் நின்றமரர் தருவதே, ஒண்கையால் அமரர்தரு அதே
மெய்ப்பயின்றவர் இருக்கையே, மிழலையூர் உமது இருக்கையே
செப்புமின் எருது மேயுமே, சேர்வுமக்கு எருதும் ஏயுமே
(8)
தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே
வான்அடர்த்த கயிலாயமே, வந்து மேவு கயிலாயமே
தானெடுத்த வல்லரக்கனே, தடமுடித் திரள் அரக்கனே
மேல்நடைச் செல விருப்பனே, மிழலை நற்பதி விருப்பனே
(9)
காய மிக்கதொரு பன்றியே, கலந்த நின்னவுருபு அன்றியே
ஏய இப்புவி மயங்கவே, இருவர் தாம் மன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே, தோன்றி நின்ற மணிகண்டனே
மேய இத்துயில் விலக்கணா, மிழலை மேவிய இலக்கணா
(10)
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கமார் அமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே, மதித்தெனைச் சிறிதும் வல்லையே
எஞ்சலின்றி வருஇத்தகா, மிழலைசேரும் விறல் வித்தகா
(11)
மேய செஞ்சடையின் அப்பனே, மிழலை மேவிய என்அப்பனே
ஏயுமா செய இருப்பனே, இசைந்தவா செய விருப்பனே
காயவர்க்க அசம்பந்தனே, காழி ஞானசம்பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே, வல்லவர்க்கும் இவை பத்துமே

 

திருவாரூர் – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருவாரூர்

(1)
பவனமாய்ச் சோடையாய் நாஎழாப் பஞ்சுதோய்ச் சட்ட உண்டு
சிவனதாள் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கினாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்தேறிய காளகண்டன்
அவனது ஆரூர் தொழுதுய்யலாம், மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே
(2)
தந்தையார் போயினார், தாயரும் போயினார், தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டுபோவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தண் ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(3)
நிணங்குடர் தோள்நரம்பு என்புசேர் ஆக்கைதான் நிலாயதன்றால்
குணங்களார்க்கல்லது குற்ற நீங்காதெனக் குலுங்கினாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொடேத்தும்
அணங்கன் ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(4)
நீதியால் வாழ்கிலை, நாள்செலா நின்றன, நித்த நோய்கள்
வாதியா, ஆதலால் நாளுநாள் இன்பமே மருவினாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணர்கள் ஏத்து முக்கண்
ஆதிஆரூர் தொழுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(5)
பிறவியால் வருவன கேடுள, ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கல்லது துன்ப நீங்காதெனத் தூங்கினாயே
மறவல்நீ, மார்க்கமே நண்ணினாய், தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன்ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(6)
செடிகொள் நோய்ஆக்கை ஐம்பாம்பின் வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை
கடிகொள் பூந்தேன் சுவைத்து இன்புறலாமென்று கருதினாயே
முடிகளால் வானவர் முன்பணிந்தன்பராய் ஏத்து முக்கண்
அடிகள்ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(7)
ஏறுமால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கினாயே
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர், மதியம் வைத்த
ஆறன்ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(8)
என்பினால் கழிநிரைத்து, இறைச்சிமண் சுவரெறிந்து, இதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப் பொல்லாமையால் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையில் மூழ்கிடாதே
அன்பன்ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(9)
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார், புத்திரர் தாரமென்னும்
பந்த நீங்காதவர்க்குய்ந்து போக்கில்எனப் பற்றினாயே
வெந்த நீறாடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்
எந்தைஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(10)
நெடியமால் பிரமனும் நீண்டுமண் இடந்தின்ன நேடிக் காணாப்
படியனார், பவளம்போல் உருவனார், பனிவளர் மலையாள் பாக
வடிவனார், மதிபொதி சடையனார், மணியணி கண்டத்தெண்தோள்
அடிகள் ஆரூர் தொழுதுய்யலாம், மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(11)
பல்லிதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லியம் போது எரியாடும் எம்ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார் ஒதநீர் வையகத்தே

 

திருவாரூர் – சம்பந்தர் தேவாரம் (4):

<– திருவாரூர்

(1)
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திருவாரூர்எம்
எந்தை தான்எனை ஏன்றுகொளும் கொலோ
(2)
கருத்தனே, கருதார் புரமூன்றெய்த
ஒருத்தனே, உமையாள்ஒரு கூறனே
திருத்தனே, திருவாரூர்எம் தீ வண்ண
அருத்தஎன் எனைஅஞ்சல் என்னாததே
(3)
மறையன், மாமுனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில் எரியூட்டினான்
சிறைவண்டார் பொழில்சூழ் திருவாரூர்எம்
இறைவன் தான்எனை ஏன்றுகொளும் கொலோ
(4)
பல்லிலோடு கையேந்திப் பலிதிரிந்து
எல்லி வந்திடுகாட்டு எரியாடுவான்
செல்வ மல்கிய தென் திருவாரூரான்
அல்லல் தீர்த்தெனை அஞ்சலெனும் கொலோ
(5)
குருந்தமேறிக் கொடிவிடு மாதவி
விரிந்தலர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ் திருவாரூரான்
வருந்தும் போதெனை வாடல்எனும் கொலோ
(6)
வார்கொள் மென்முலையாள் ஒரு பாகமா
ஊர்களார் இடுபிச்சை கொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள்சூழ் திருவாரூரான்
ஆர்கணா எனை அஞ்சல் எனாததே
(7)
வளைக்கை மங்கை நல்லாளைஒர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்கும் தண்புனல் சூழ் திருவாரூரான்
இளைக்கும் போதெனை ஏன்றுகொளும் கொலோ
(8)
இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்கக் கால்விரலால் கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ் திருவாரூரான்
அலங்கல் தந்தெனை அஞ்சலெனும் கொலோ
(9)
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன், பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென்திருவாரூர் எம்
அடிகள் தானெனை அஞ்சலெனும் கொலோ
(10)
மாசு மெய்யினர் வண்துவர் ஆடைகொள்
காசை போர்க்கும் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்திருவாரூர் எம்
ஈசன் தானெனை ஏன்றுகொளும் கொலோ
(11)
வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான் திருவாரூரை
மன்னு காழியுண் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கில்லை பாவமே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (8):

<– திருவீழிமிழலை

(1)
கேள்வியர், நாள்தொறும் ஓதுநல் வேதத்தர், கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்
வாழியர், தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கெலாம்
ஆழியர், தம்அடி போற்றி என்பார்கட்கு அணியரே
(2)
கல்லின்நற் பாவையோர் பாகத்தர், காதலித்தேத்திய
மெல்லினத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்
நல்லினத்தார் செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே
(3)
நஞ்சினை உண்டிருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்உமை பங்கினர், கங்கைஅங்காடிய
மஞ்சனச் செஞ்சடையார் என வல்வினை மாயுமே
(4)
கலையிலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்
விலையிலங்கும் மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங்கும் பிறைதாழ் வடம், சூலம், தமருகம்
அலையிலங்கும் புனலேற்றவர்க்கும் அடியார்க்குமே
(5)
பிறையுறு செஞ்சடையார், விடையார், பிச்சை நச்சியே
வெறியுறு நாள்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்
முறைமுறையால் இசை பாடுவார் ஆடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே
(6)
வசையறு மாதவம் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக்கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசை வரவிட்டியல் கேட்பித்துக், கல்ல வடமிட்டுத்
திசை தொழுதாடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே
(7)
சேடர், விண்ணோர்கட்குத் தேவர், நல் மூவிரு தொன்னூலர்
வீடர் முத்தீயர், நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங்கா உமை காண, அண்டத்திமையோர் தொழ
நாடகமாடியை ஏத்தவல்லார் வினை நாசமே
(8)
எடுத்தவன் மாமலைக் கீழ் இராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமிழலையார்
படுத்து வெங்காலனைப் பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பம், கொடுப்பர், தொழக் குறைவில்லையே
(9)
திக்கமர் நான்முகன் மால் அண்டமண்டலம் தேடிட
மிக்கமர் தீத்திரளாயவர் வீழி மிழலையார்
சொக்கமதாடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்தன் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே
(10)
துற்றரையார், துவராடையர், துப்புரவொன்றிலா
வெற்றரையார் அறியாநெறி வீழி மிழலையார்
சொல்தெரியாப் பொருள் சோதிக்கப்பால் நின்ற சோதிதான்
மற்றறியா அடியார்கள் தம்சிந்தையுள் மன்னுமே
(11)
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ்பொழில் காழியுண் ஞானசம்பந்தன் ஆய்ந்து
ஓதிய ஒண்தமிழ் பத்திவை உற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (10):

<– திருவீழிமிழலை

(1)
மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டொளி மணியல்குல் உமைஅமை உருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியரவுடனுறை முடிமிசை
விட்டொளி உதிர்பிதிர் மதியவர் பதி விழிமிழலையே
(2)
எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி இளமுலைப்
பெண்ணுறும் உடலினர், பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர், கடியதொர் விடையினர், கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர், பதி விழிமிழலையே
(3)
மைத்தகும் அதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென விசைமுரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர் இடம் விழிமிழலையே
(4)
செவ்வழல் எனநனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வழல் அரவினர், கதிர்முதிர் மழுவினர், தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை அழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதி விழிமிழலையே
(5)
பைங்கணதொரு பெருமழலை வெள்ஏற்றினர், பலியெனா
எங்கணும் உழிதர்வர், இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர், அமரர்கள் அடியிணை தொழுதெழ, வாரமா
வெங்கண அரவினர், உறைதரு பதி விழிமிழலையே
(6)
பொன்னன புரிதரு சடையினர், பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசைமுரல் சரிதையர், திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர், பதி விழிமிழலையே
(7)
அக்கினொடரவரை அணிதிகழ் ஒளியதொர் ஆமைபூண்டு
இக்குக மலிதலை கலனென விடுபலி ஏகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடும் இசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில் விழிமிழலையே
(8)
பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொடடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஓதமொடொலி திரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொடுறுதொழில் மதியவர் பதி விழிமிழலையே
(9)
நீரணி மலர்மிசை உறைபவன், நிறைகடல் உறுதுயில்
நாரணன் எனஇவர் இருவரும் நறுமலர் அடிமுடி
ஓர்உணர்வினர் செலலுறல் அரும்உருவினொடு ஒளிதிகழ்
வீரணர், உறைவது வெறிகமழ் பொழில் விழிமிழலையே
(10)
இச்சையர், இனிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர், பெருமையை இறை பொழுதறிவென உணர்விலர்
மொச்சைய அமணரும் உடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் விழிமிழலையே
(11)
உன்னிய வருமறை ஒலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை அவருறை எழில்திகழ் பொழில் விழிமிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம்பந்தன் வண்தமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுலகு உறுகதி பெறுவரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (11):

<– திருவீழிமிழலை

(1)
வெண்மதி தவழ்மதிள் மிழலையுளீர், சடை
ஒண்மதி அணிஉடையீரே
ஒண்மதி அணியுடையீர் உமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே
(2)
விதிவழி மறையவர் மிழலையுளீர், நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடையீர் உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே
(3)
விரைமலி பொழிலணி மிழலையுளீர், ஒரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடையீர் உமை
உரைசெயும் அவைமறை ஒலியே
(4)
விட்டெழில் பெறுபுகழ் மிழலையுளீர், கையில்
இட்டெழில் பெறுகிறது எரியே
இட்டெழில் பெறுகிறது எரியுடையீர் புரம்
அட்டது வரை சிலையாலே
(5)
வேனிகர் கண்ணியர் மிழலையுளீர், நல
பானிகர் உருவுடையீரே
பானிகர் உருவுடையீர் உமதுடன் உமை
தான்மிக உறைவது தவமே
(6)
விரைமலி பொழிலணி மிழலையுளீர், செனி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதொர் நெறியுடையீர், உமது
அரையுற அணிவன அரவே
(7)
விசையுறு புனல்வயல் மிழலையுளீர், அரவு
அசையுற அணிவுடையீரே
அசையுற அணிவுடையீர் உமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே
(8)
விலங்கலொண் மதிளணி மிழலையுளீர், அன்று
இலங்கைமன் இடர் கெடுத்தீரே
இலங்கைமன் இடர்கெடுத்தீர் உமையேத்துவார்
புலன்களை முனிவது பொருளே
(9)
வெற்பமர் பொழிலணி மிழலையுளீர், உமை
அற்புதன் அயன்அறியானே
அற்புதன் அயன்அறியா வகை நின்றவ
நற்பதம் அறிவது நயமே
(10)
வித்தக மறையவர் மிழலையுளீர், அன்று
புத்தரொடமண் அழித்தீரே
புத்தரொடமண்அழித்தீர் உமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடையவரே
(11)
விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுண் ஞானசம்பந்தன்
சண்பையுண் ஞானசம்பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (9):

<– திருவீழிமிழலை

(1)
சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வ மறையோர்கள் பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையினான் அமர் சயங்கொள் பதிதான்
பார்மருவு பங்கயம் உயர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே
(2)
பட்ட முழவிட்ட பணிலத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள்செய்த அழல்கொள் மேனியவன் ஊர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே
(3)
மண்ணிழி சுரர்க்கு வளமிக்க பதி, மற்றுமுள மன்னுயிர்களுக்கு
எண்ணிழிவில் இன்ப நிகழ்வெய்த, எழிலார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவு இலாதவகை பாட, மடமஞ்ஞை நடமாட, அழகார்
விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே
(4)
செந்தமிழர் தெய்வமறை நாவர், செழுநற்கலை தெரிந்தவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்ஊர்
கொந்தலர் பொழில், பழன வேலி, குளிர் தண்புனல் வளம் பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே
(5)
பூத பதியாகிய புராணமுனி புண்ணிய நன்மாதை மருவிப்
பேதமதிலாத வகை பாகமிக வைத்த பெருமானது இடமாம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதிலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே
(6)
மண்ணின் மறையோர் மருவு வைதிகமும், மாதவமும், மற்றும்உலகத்து
எண்ணில் பொருளாயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே
(7)
மந்திரநன் மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தர விசும்பணவி அற்புதமெனப் படரும் ஆழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே
(8)
ஆனவலியில் தசமுகன் தலையரங்க அணியாழி விரலால்
ஊனமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன்ஊர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிளோடு
ஆனதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே
(9)
ஏனஉருவாகி மண்இடந்த இமையோனும், எழிலன்ன உருவம்
ஆனவனும், ஆதியினோடு அந்தமறியாத அழல் மேனியவன் ஊர்
வானணவு மாமதில் மருங்கலர் நெருங்கிய வளங்கொள் பொழில்வாய்
வேனல் அமர்வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே
(10)
குண்டமணராகி ஒரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்து
எண்திசையும் இல்லதொரு தெய்வம் உளதென்பர் அதுஎன்ன பொருளாம்
பண்டைஅயன் அன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதி சீர்
வெண்தரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே
(11)
மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம்அமர் செல்வ மலிகின்ற சிவலோக மருவி
அத்தகு குணத்தவர்களாகி அனுபோகமொடு யோகம் அவரதே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page