திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (7):

<– திருவீழிமிழலை

(1)
ஏரிசையும் வடஆலின் கீழிருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கிநின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே
(2)
பொறியரவம் அதுசுற்றிப் பொருப்பே மத்தாகப் புத்தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னும்கோயில்
செறிஇதழ்த் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச் சாமரையிரட்ட இளஅன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே
(3)
எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள் தம் புரமூன்றும், எழிற்கணாடி
உழுந்துருளும் அளவையின் ஒள்ளெரிகொள வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழும்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே
(4)
உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்
வரைசேரு முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர் பொன்னிதழி தர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே
(5)
காணுமாறரிய பெருமானாகிக், காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப்
பேணு மூன்றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்ற பர தத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்என்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலையாமே
(6)
அகனமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கிஞானம்
புகலுடையோர் தம்உள்ளப் புண்டரிகத்துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குள வர்க்கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணம்செய்யும் மிழலையாமே
(7)
ஆறாடு சடைமுடியன், அனலாடு மலர்க்கையன், இமயப்பாவை
கூறாடு திருவுருவன், கூத்தாடும் குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநல் பண்பாடும் மிழலையாமே
(8)
கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்கல் உறும்அரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரல் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்தன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யஇழி விமானம்சேர் மிழலையாமே
(9)
செந்தளிர் மாமலரோனும், திருமாலும் ஏனமோடு அன்னமாகி
அந்தம்அடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோன் அமருங்கோயில்
புந்தியினால் மறைவழியே புல்பரப்பி நெய்சமிதை கையில்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகஅளிப்போர் சேரூமூர் மிழலையாமே
(10)
எண்ணிறந்த அமணர்களும், இழிதொழில்சேர் சாக்கியரும் என்றும்தன்னை
நண்ணரிய வகை மயக்கித் தன்னடியார்க்கருள் புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும் இழியும் மிழலையாமே
(11)
மின்னியலும் மணிமாட மிடை வீழிமிழலையான் விரையார் பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகும் சிரபுரக்கோன், செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்தும்ஏத்தி
இன்னிசையால் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினோரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (6):

<– திருவீழிமிழலை

(1)
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனைஇட மகிழ்பவர்
நலமலி உருவுடை அவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினைய வலவரே
(2)
இருநிலம் இதன்மிசை எழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினைய வலவரே
(3)
கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி இதழியும் இசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினைய வலவரே
(4)
மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுகள் அவை முழவொடு மிசை
பாடலில் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினைய வலவரே
(5)
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவனுடை எழில்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வலவரே
(6)
அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகைசிறு முறுவல் கொடொளி பெற
நின்றவன் மிழலையை நினைய வலவரே
(7)
கரம்பயில் கொடையினர் கடிமலர் அயனதொர்
சிரம் பயில்வற எறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை அறநெறி
நிரம்பினர் மிழலையை நினைய வலவரே
(8)
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கனன் மணிமுடி ஒருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வலவரே
(9)
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு இயல்பினொடுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வலவரே
(10)
மன்மதன் எனஒளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை அவர்களும் மதியிலர்
துன்மதி அமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினைய வலவரே
(11)
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (4):

<– திருவீழிமிழலை

(1)
இரும்பொன் மலைவில்லா, எரியம்பா நாணில்
திரிந்த புரமூன்றும் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே
(2)
வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத்திசையோடும் கேள்விக்கிடையோடும்
வேதத்தொலி ஓவா வீழிமிழலையே
(3)
பயிலும் மறையாளன் தலையில் பலிகொண்டு
துயிலும் பொழுதாடும் சோதி உறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் இளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழிமிழலையே
(4)
இரவன் பகலோனும் எச்சத்திமையோரை
நிரவிட்டருள் செய்த நிமலன் உறைகோயில்
குரவம் சுரபுன்னை குளிர்கோங்கிள வேங்கை
விரவும் பொழில் அந்தண் வீழிமிழலையே
(5)
கண்ணில் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக்கருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணில் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணில் புயல்காட்டும் வீழிமிழலையே
(6)
மால் ஆயிரம்கொண்டு மலர்க்கண்ணிட ஆழி
ஏலாவலயத்தோடு ஈந்தான்உறை கோயில்
சேலாகிய பொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலால் எரிகாட்டும் வீழிமிழலையே
(7)
மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே
(8)
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள் ஆளாக்கொண்டான் உறைகோயில்
படித்தார், மறைவேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழிமிழலையே
(9)
கிடந்தான் இருந்தானும் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங்கவரேத்தச் சுடராயவன் கோயில்
படந்தாங்கரவல்குல் பவளத் துவர்வாய் மேல்
விடம்தாங்கிய கண்ணார் வீழிமிழலையே
(10)
சிக்கார் துவராடைச் சிறுதட்டுடையாரும்
நக்காங்கலர் தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையாய் உலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழிமிழலையே
(11)
மேல் நின்றிழி கோயில் வீழிமிழலையுள்
ஏனத்தெயிற்றானை எழிலார் பொழிற்காழி
ஞானத்துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத்திவை சொல்ல வல்லோர் நல்லோரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவீழிமிழலை

(1)
தடநிலவிய மலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொடு
அடலசுரரொடு அமரர்கள் அலைகடல்கடை உழியெழு மிகுசின
விடம் இடைதரு மிடறுடையவன், விடைமிசை வரும்அவன் உறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே
(2)
தரையொடு திவிதல நலிதரு தகு திறலுறு சலதரனது
வரையன தலை விசையொடு வரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை அவனுறை பதிமிகு
திரைமலி கடல்மணல் அணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே
(3)
மலைமகள்தனை இகழ்வதுசெய்த மதியறு சிறுமனவனது உயர்
தலையினொடு, அழலுருவன் கரமற முனிவு செய்தவன் உறைபதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களை தருகொடை பயில்பவர் மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர் திருமிழலையே
(4)
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒருகணை செல நிறுவிய
பெருவலியினன், நலமலிதரு கரன், உரமிகு பிணம் அமர்வன
இருளிடை அடையுறவொடு நடவிசை உறுபரன் இனிதுறை பதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே
(5)
அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும் அடியிணை இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன்உறைவிடம், ஒளி
மணிபொரு வரு மரகத நிலமலி புனல் அணைதரு வயலணி
திணிபொழில் தருமணமது நுகர் அறுபதமுரல் திருமிழலையே
(6)
வசையறு வலி வனசர உருவதுகொடு, நினைவரு தவமுயல்
விசையன திறல் மலைமகள்அறிவுறு திறலமர் மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரும் அவனுறை பதியது, மிகுதரு
திசையினில் மலர் குலவிய செறிபொழில் மலிதரு திருமிழலையே
(7)
நலமலி தரு மறைமொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிரது கொளவரு
சலமலி தரு மறலி தனுயிர் கெடஉதை செய்தவன் உறைபதி
திலகமிதென உலகுகள்புகழ் தருபொழில் அணிதிரு மிழலையே
(8)
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவது செய்த தசமுகனது
கரம் இருபது நெரிதர விரல் நிறுவிய கழலடி உடையவன்
வரன்முறை உலகவை தருமலர் வளர் மறையவன் வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதி திருமிழலையே
(9)
அயனொடும், எழிலமர் மலர்மகள் மகிழ்கணன் அளவிடல் ஒழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்படி உருவது வர, வரன்முறை
சயசய எனமிகு துதிசெய வெளிஉருவிய அவன் உறைபதி
செய நிலவிய மதில் மதியது தவழ்தர உயர்திரு மிழலையே
(10)
இகழுருவொடு பறிதலை கொடும் இழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ் துவருடை உடல் பொதிபவர் கெட, அடியவர் மிக அருளிய
புகழுடை இறையுறை பதி, புனல்அணி கடல் புடை தழுவிய புவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே
(11)
சினமலி கரியுரி செய்தசிவன் உறைதரு திருமிழலையை, மிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ் விரகனதுரை ஒருபதும்
மனமகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர இருநிலனிடை இனிதமர்வரே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவீழிமிழலை

(1)
அரையார் விரிகோவண ஆடை
நரையார் விடையூர்தி நயந்தான்
விரையார் பொழில் வீழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே
(2)
புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் ஒருகங்கை கரந்தான்
வினைஇல்லவர் வீழிம்மிழலை
நினைவில்லவர் நெஞ்சமும் நெஞ்சே
(3)
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழிம்மிழலை
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே
(4)
உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் அரையார்த்த அழகன்
விரவும் பொழில் வீழிம்மிழலை
பரவும் அடியார் அடியாரே
(5)
கரிதாகிய நஞ்சணி கண்டன்
வரிதாகிய வண்டறை கொன்றை
விரிதார் பொழில் வீழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே
(6)
சடையார் பிறையான், சரிபூதப்
படையான், கொடி மேலதொர் பைங்கண்
விடையான் உறை வீழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே
(7)
செறியார் கழலும் சிலம்பார்க்க
நெறியார் குழலாளொடு நின்றான்
வெறியார் பொழில் வீழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
(8)
உளையா வலிஒல்க அரக்கன்
வளையா விரலூன்றிய மைந்தன்
விளையார் வயல் வீழிம்மிழலை
அளையா வருவார் அடியாரே
(9)
மருள் செய்திருவர் மயலாக
அருள் செய்தவன், ஆரழலாகி
வெருள் செய்தவன், வீழிம்மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே
(10)
துளங்கும் நெறியார் அவர்தொன்மை
வளங்கொள்ளல்மின் புல்லமண் தேரை
விளங்கும் பொழில் வீழிம்மிழலை
உளங்கொள்பவர் தம்வினை ஓய்வே
(11)
நளிர் காழியுண் ஞானசம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில் வீழிம்மிழலை
கிளர்பாடல் வல்லார்க்கிலை கேடே

 

திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவீழிமிழலை

(1)
சடையார் புனல் உடையான், ஒரு சரிகோவணம் உடையான்
படையார் மழுவுடையான், பல பூதப்படை உடையான்
மடமான்விழி உமைமாது இடம்உடையான், எனை உடையான்
விடையார் கொடியுடையான் இடம் வீழிம்மிழலையே
(2)
ஈறாய் முதலொன்றாய், இரு பெண்ஆண், குணமூன்றாய்
மாறா மறைநான்காய், வருபூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை, ஏழோசையொடு, எட்டுத்திசை தானாய்
வேறாய் உடனானான் இடம் வீழிம்மிழலையே
(3)
வம்மின் அடியீர் நாண்மலரிட்டுத் தொழுதுய்ய
உம்அன்பினொடு எம்அன்பு செய்தீசன் உறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கெண்டித் திசையெங்கும்
விம்மும் பொழில்சூழ் தண்வயல் வீழிம்மிழலையே
(4)
பண்ணும் பதமேழும், பல ஓசைத் தமிழவையும்
உள்நின்றதொர் சுவையும், உறு தாளத்தொலி பலவும்
மண்ணும் புனலும், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்
விண்ணும் முழுதானான் இடம் வீழிம்மிழலையே
(5)
ஆயாதன சமயம்பல அறியாதவன், நெறியின்
தாயானவன், உயிர்கட்குமுன் தலையானவன், மறைமுத்
தீயானவன், சிவனெம்இறை, செல்வத் திருவாரூர்
மேயானவன், உறையும்இடம் வீழிம்மிழலையே
(6)
கல்லால்நிழல் கீழாய் இடர்காவாய் என வானோர்
எல்லாமொரு தேராய், அயன் மறைபூட்டி நின்றுய்ப்ப
வல்வாய்எரி காற்றீர்க்கு அரி கோல், வாசுகி நாண்கல்
வில்லால் எயிலெய்தான் இடம் வீழிம்மிழலையே
(7)
கரத்தான்மலி சிரத்தான், கரிஉரித்தாயதொர் படத்தான்
புரத்தார் பொடிபடத் தன் அடிபணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிகஅளித்தான் இடம், வளர்புன்னை முத்தரும்பி
விரைத்தாது பொன்மணி ஈன்றணி வீழிம்மிழலையே
(8)
முன்னிற்பவர் இல்லா முரணரக்கன் வடகயிலை
தன்னைப் பிடித்தெடுத்தான் முடி தடந்தோளிற ஊன்றிப்
பின்னைப் பணிந்தேத்தப் பெருவாள் பேரொடும் கொடுத்த
மின்னிற்பொலி சடையான்இடம் வீழிம்மிழலையே
(9)
பண்டேழு உலகுண்டான், அவை கண்டானும் முன்னறியா
ஒண்தீயுருவானான் உறை கோயில், நிறை பொய்கை
வண்தாமரை மலர்மேல் மடஅன்னம் நடைபயில
வெண்தாமரை செந்தாதுதிர் வீழிம்மிழலையே
(10)
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணமிலிகள்
இசங்கும் பிறப்பறுத்தான் இடம், இருந்தேன் களித்திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிம்மிழலையே
(11)
வீழிம்மிழலை மேவிய விகிர்தன் தனை, விரைசேர்
காழிந்நகர் கலைஞான சம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின்னிசை வல்லார் சொலக்கேட்டார் அவரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே

 

திருநறையூர்ச் சித்தீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
பிறைகொள் சடையர், புலியின் உரியர், பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர், கபாலமேந்தும் கையர், கங்காளர்
மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வெய்திச்
சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(2)
பொங்கார் சடையர், புனலர், அனலர், பூதம் பாடவே
தங்காதலியும் தாமும் உடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னி மத்தம் சூடிக் குளிர் பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சரத்தாரே
(3)
முடிகொள் சடையர், முளைவெண் மதியர், மூவா மேனிமேல்
பொடிகொள் நூலர், புலியின் அதளர், புரி புன்சடை தாழக்
கடிகொள் சோலை வயல்சூழ் மடுவில் கயலார் இனம்பாயக்
கொடிகொள் மாடக் குழாமார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(4)
பின்தாழ் சடைமேல் நகுவெண் தலையர், பிரமன் தலையேந்தி
மின்தாழ் உருவில் சங்கார், குழை தான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(5)
நீரார் முடியர், கறைகொள் கண்டர், மறைகள் நிறை நாவர்
பாரார் புகழால் பத்தர் சித்தர் பாடியாடவே
தேரார் வீதி முழவார் விழவின் ஒலியும் திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(6)
நீண்ட சடையர், நிரை கொள் கொன்றை, விரைகொள் மலர்மாலை
தூண்டுசுடர் பொன்னொளி கொள் மேனிப் பவளத்தெழிலார், வந்து
ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம்
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(7)
குழலார் சடையர், கொக்கின் இறகர், கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர், சரிகோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடைமேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
(8)
கரையார் கடல்சூழ் இலங்கை மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளால் எடுக்க முடிகள் நெரித்து, மனமொன்றி
உரையார் கீதம் பாடநல்ல உலப்பில் அருள் செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(9)
நெடியான் பிரமன் நேடிக் காணார், நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால் வணங்கிக் குணங்களேத்தி, முதல்வா அருளென்னச்
செடியார் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(10)
நின்றுண் சமணர், இருந்துண் தேரர், நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர் வாயிலுரை கேட்டு உழல்வீர்காள்
கன்றுண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல்பொழியச்
சென்றுண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே
(11)
குயிலார் கோல மாதவிகள் குளிர்பூஞ் சுர புன்னை
செயிலார் பொய்கை சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்த காழிமல்கு சம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல் வல்லார் பாவ நாசமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page