திருவீழிமிழலை – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருவீழிமிழலை

(1)
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல்இல்லையே
(2)
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே
(3)
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே
(4)
நீறு பூசினீர் ஏறதேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே
(5)
காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேமம் நல்குமே
(6)
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணி கொண்டருளுமே
(7)
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
(8)
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே
(9)
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே
(10)
பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவதரியதே
(11)
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே

 

திருக்கண்டியூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கண்டியூர்

(1)
வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மினீர், அருள் வேண்டுவீர்
கனைவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன்
தனமுனே தனக்கின்மையோ, தமராயினார் அண்டம்ஆளத், தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப்பாடி இவ்வையமாப் பலி தேர்ந்ததே
(2)
உள்ளவாறெனக்குரை செய்மின், உயர்வாய மாதவம் பேணுவீர்
கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்துறை காதலான்
பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும், பெரு நீரொலி
வெள்ளம் தாங்கியதென் கொலோ, மிகு மங்கையாள் உடனாகவே
(3)
அடியராயினீர் சொல்லுமின், அறிகின்றிலேன் அரன் செய்கையைப்
படியெலாம் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர்
பொடியதார் திருமார்பினில் புரிநூலும் பூண்டெழு பொற்பதே
(4)
பழைய தொண்டர்கள் பகருமின் பலவாய வேதியன் பான்மையைக்
கழையுலாம் புனல்மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழையொர் காதினில் பெய்துகந்து, ஒரு குன்றின் மங்கை வெருவுறப்
புழைநெடுங்கை நன்மா உரித்தது போர்த்துகந்த பொலிவதே
(5)
விரவிலாதுமைக் கேட்கின்றேன், அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்புமின்
கரையெலாம் திரைமண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவமொந்தை முழா ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
பரவு வானவர்க்காக வார்கடல் நஞ்சமுண்ட பரிசதே
(6)
இயலுமாறெனக்கு இயம்புமின், இறைவன்னுமாய் நிறை செய்கையைக்
கயல்நெடுங் கண்ணினார்கள் தாம்பொலி கண்டியூர்உறை வீரட்டன்
புயல் பொழிந்திழி வானுளோர்களுக்காக அன்றயன் பொய்ச்சிரம்
அயல்நக அதரிந்து மற்றதில் ஊணுகந்த வருத்தியே
(7)
திருந்து தொண்டர்கள் செப்புமின், மிகச் செல்வன் தன்னது திறமெலாம்
கருந்தடம் கண்ணினார்கள் தாந்தொழு கண்டியூருறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல்நிழல் அறமுரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன்சிலையால் அம்மாமதில் மூன்று மாட்டிய வண்ணமே
(8)
நாவிரித்து அரன் தொல்புகழ் பல பேணுவீர், இறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய் கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப் பயன் ஆனஞ்சாடிய கொள்கையும், கொடி வரைபெற
மாவரைத் தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பதே
(9)
பெருமையே சரணாக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசுமின்
கருமையார் பொழில் சூழும் தண்வயல் கண்டியூருறை வீரட்டன்
ஒருமையால்உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்தேத்தவே
அருமையால் அவருக்குயர்ந்து எரியாகி நின்ற அத்தன்மையே
(10)
நமரெழு பிறப்பறுக்கும் மாந்தர்காள் நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
கமரழி வயல்சூழும் தண்புனல் கண்டியூருறை வீரட்டன்
தமர் அழிந்தெழு சாக்கியச் சமண் ஆதர்ஓதும் அதுகொளாது
அமரரானவர் ஏத்த அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே
(11)
கருத்தனைப், பொழில்சூழும் கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத், திறம் அடியர்பால் மிகக் கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாம் திகழ்காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே

 

திருநறையூர்ச் சித்தீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநறையூர்ச் சித்தீச்சரம்

(1)
ஊருலாவு பலி கொண்டு உலகேத்த
நீருலாவு நிமிர் புன்சடை அண்ணல்
சீருலாவு மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே
(2)
காடு நாடும் கலக்கப் பலிநண்ணி
ஓடுகங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடும்ஆக மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச்சரமே நினை நெஞ்சே
(3)
கல்வியாளர் கனகம் அழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையான் ஊர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே
(4)
நீடவல்ல நிமிர்புன் சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(5)
உம்பராலும் உலகின்னவராலும்
தம்பெருமை அளத்தற்கரியார் ஊர்
நண்புலாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(6)
கூருலாவு படையான், விடையேறி
போருலாவு மழுவான், அனலாடி
பேருலாவு பெருமான் உறையூரில்
சேரும் சித்தீச்சரமே இடமாமே
(7)
அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(8)
அரக்கன் ஆண்மைஅழிய வரை தன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
(9)
ஆழியானும் மலரில் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழுநேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச்சரமே நினை நெஞ்சே
(10)
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையிலுண்டு கழறும் உரை கொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் அறையூரில்
செய்யும் சித்தீச்சரமே தவமாமே
(11)
மெய்த்துலாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சரத்தை உயர்காழி
அத்தன் பாதம்அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே

திருக்கண்டியூர் – அப்பர் தேவாரம்:

<– திருக்கண்டியூர்

(1)
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்திட்டிறைஞ்சித்
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவன் ஆதிபுராணன், அன்றோடிய பன்றிஎய்த
கானவனைக் கண்டியூர் அண்ட வாணர் தொழுகின்றதே
(2)
வான மதியமும் வாளரவும் புனலோடு சடைத்
தானம் அதுவென வைத்துழல்வான், தழல் போல்உருவன்
கான மறியொன்று கையுடையான், கண்டியூர் இருந்த
ஊனமில் வேதம்உடையனை நாமடி உள்குவதே
(3)
பண்டங்கறுத்ததோர் கையுடையான், படைத்தான் தலையை
உண்டங்கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியும்
கண்டம் கறுத்த மிடறுடையான், கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானைக் கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே
(4)
முடியின் முற்றாததொன்று இல்லை, எல்லாமுடன் தானுடையான்
கொடியும் உற்ற விடையேறியோர், கூற்றொரு பாலுடையான்
கடியமுற்ற வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்
அடியும் உற்றார் தொண்டர், இல்லை கண்டீர் அண்டவானவரே
(5)
பற்றியொர் ஆனை உரித்தபிரான், பவளத்திரள் போல்
முற்றும் அணிந்ததொர் நீறுடையான், முன்னமே கொடுத்த
கல்தங்குடையவன் தானறியான், கண்டியூர் இருந்த
குற்றமில் வேதம் உடையானையாம் அண்டர் கூறுவதே
(6)
போர்ப்பனை யானை உரித்த பிரான், பொறிவாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரைகடல் சூழுலகம் இதனைக்
காப்பது காரணமாகக் கொண்டான், கண்டியூர் இருந்த
கூர்ப்புடை ஒள்வாள் மழுவனையாம் அண்டர் கூறுவதே
(7)
அட்டது காலனை, ஆய்ந்தது வேதம் ஆறங்கம், அன்று
சுட்டது காமனைக் கண்ணதனாலே, தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டமுன் வேதப் படையனையாம் அண்டர் கூறுவதே
(8)
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலரான எல்லாம்
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டை மாலை அங்கைக்
கட்டும் அரவது தானுடையான், கண்டியூர் இருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனையாம் அண்டர் கூறுவதே
(9)
மாய்ந்தன தீவினை, மங்கின நோய்கள், மறுகிவிழத்
தேய்ந்தன பாவம், செறுக்ககில்லா நம்மைச் செற்று, அநங்கைப்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே
(10)
மண்டி மலையை எடுத்து மத்தாக்கிய வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல்விடம் கண்டருளி
உண்ட பிரான், நஞ்சொளித்த பிரான், அஞ்சியோடி நண்ணக்
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே

 

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (47):

<– சீகாழி

(1)
எம்பிரான் எனக்கமுதம் ஆவானும், தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழில் பிரமபுரத்துறையும் வானவனே
(2)
தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்கு
ஆமென்று சரண்புகுந்தார் தமைக்காக்கும் கருணையினான்
ஓம்என்று மறைபயில்வார் பிரமபுரத்துறைகின்ற
காமன்தன் உடலெரியக் கனல் சேர்ந்த கண்ணானே
(3)
நன்னெஞ்சே உனைஇரந்தேன், நம்பெருமான் திருவடியே
உன்னஞ் செய்திரு கண்டாய், உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத்தாரமுதை எப்போதும்
பன்னஞ்சீர் வாய்அதுவே, பார் கண்ணே பரிந்திடவே
(4)
சாநாளின்றி மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்
கோனாளும் திருவடிக்கே கொழுமலர் தூவு, எத்தனையும்
தேனாளும் பொழில் பிரமபுரத்துறையும் தீவணனை
நாநாளும் நன்னியமம் செய்தவன்சீர் நவின்றேத்தே
(5)
கண்ணுதலான், வெண்ணீற்றான், கமழ்சடையான், விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரம் தொழவிரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே
(6)
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கே என்றருள் புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்துறையும்
சங்கே ஒத்தொளிர் மேனிச் சங்கரன்தன் தன்மைகளே
(7)
சிலையது வெஞ்சிலையாகத் திரிபுர மூன்றெரிசெய்த
இலைநுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத்தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகில் பெறலாமே
(8)
எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி, நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான்உறை பிரமபுரம் தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே
(9)
கரியானும் நான்முகனும் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி, அரவஞ்சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்துறையும் திகழ்பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே
(10)
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்தலைக்கை மூர்த்தியாம் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழில் பிரமபுரத்துறையும்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே
(11)
தன்னடைந்தார்க்கின்பங்கள் தருவானைத், தத்துவனைக்
கல்அடைந்த மதில் பிரமபுரத்துறையும் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலஅடைந்தார் புண்ணியரே

 

அரிசில்கரைப்புத்தூர் – சுந்தரர் தேவாரம்:

<– அரிசில்கரைப்புத்தூர்

(1)
மலைக்கும் மகள்அஞ்ச மதகரியை
    உரித்தீர், எரித்தீர் வரு முப்புரங்கள்
சிலைக்கும் கொலைச் சேவுகந்தேறொழியீர்
    சில்பலிக்கு இல்கள் தோறும் செலவொழியீர்
கலைக்கொம்பும் கரிமருப்பும் இடறிக்
    கலவம் மயிற்பீலியும் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசில்தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(2)
அருமலரோன் சிரம் ஒன்றறுத்தீர்
    செறுத்தீர் அழற்சூலத்தில் அந்தகனைத்
திருமகள்கோன் நெடுமால் பலநாள்
    சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத்தில் குறைவா
    நிறைவாகஓர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(3)
தரிக்கும்தரை நீர்தழல் காற்றுஅந்தரம்
    சந்திரன் சவிதா இயமானன் ஆனீர்
சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தித்
    தையலார் பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்கும் தளிர்ச் சந்தனத்தோடு வேயும்
    முழங்கும் திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(4)
கொடியுடை மும்மதில் வெந்தழியக்
    குன்றம் வில்லா நாணியில் கோல்ஒன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும்
    அளவில், உமக்கார் எதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணையான் கருப்புச்
    சிலைக் காமனை வேவக் கடைக் கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னை கொல்லோ
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(5)
வணங்கித் தொழுவார்அவர் மால்பிரமன்
    மற்றும் வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கல் தலையில் பலிகொண்டல் என்னே
    உலகங்களெல்லாம் உடையீர் உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
    இனக்கெண்டை துள்ளக் கண்டிருந்த அன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(6)
அகத்தடிமை செய்யும் அந்தணன் தான்
    அரிசில்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான்
மிகத் தளர்வெய்திக் குடத்தையும் நும்
    முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற் படியும்
    வரும் என்றொரு காசினை, நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(7)
பழிக்கும் பெருந்தக்கன் எச்சமழியப்
    பகலோன் முதலாப்பல தேவரையும்
தெழித்திட்டவர், அங்கம் சிதைத்தருளும்
    செய்கை என்னை கொலோ, மைகொள் செம்மிடற்றீர்
விழிக்கும்தழைப் பீலியொடு ஏலமுந்தி
    விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(8)
பறைக்கண் நெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
    குறள் பாரிடங்கள் பறைதாம் முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
    பெருங்காடரங்காக நின்றாடல் என்னே
கறைக்கொள் மணிகண்டமும் திண்தோள்களும்
    கரங்கள் சிரம் தன்னிலும் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே
(9)
மழைக்கண் மடவாளைஒர் பாகம்வைத்தீர்
    வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோடென்பு அணிகலனா
    முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்பும் கதலிக்கனியும்
    கமுகின்பழுக் காயும் கவர்ந்து கொண்டிட்டு
அழைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(10)
கடிக்கும் அரவால் மலையால் அமரர்
    கடலைக் கடையவ்வெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங்களை என்றதனை
    உமக்கே அமுதாக உண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்து இழுத்திட்டருவி
    இருபாலும் ஓடி இரைக்கும் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே
(11)
காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
    கழையோடகில் உந்திட்டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசில் தென்கரைப்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்து
    அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்
சீரூர்தரு தேவர் கணங்களொடும்
    இணங்கிச் சிவலோகம் எய்துவரே

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page